சென்னை : மனித வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் செந்தில் பாலாஜி. அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் – கட்சி மாறி திமுக அமைச்சரவையிலும் அமைச்சர் – என வலம் வந்த அவர் அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) மீண்டும் அமைச்சராகிறார். அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மீண்டும் அவர் மின்சாரத்துறை அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபான விநியோகங்களை நிர்வகிக்கும் டாஸ்மாக் – கலால் துறையும் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வராக இன்று பதவியேற்பார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்த அறிவிப்பு தெரிவித்தது.
இந்திய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பிற்பகல் 3.30 மணியளவில் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மற்ற சில அமைச்சர்களும் பதவியேற்கவிருக்கின்றனர்.