சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி புதுடில்லி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
சுமார் 15 மாதங்களுக்கு – அதாவது 471 நாட்களுக்கு – சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு அவர் விடுதலையாகியுள்ளார்.
சிறைவாசம் இருந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இருதய ரத்தநாள அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) ஜுன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து ஜாமீன் பெற அவர் நீதிமன்றப் போராட்டம் நடத்தினால். இறுதியில் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
அவருக்கு கடுமையான 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.
எனினும் அவர் அமைச்சராவதில் தடையில்லை என்ற சட்டக் கருத்து நிலவுகிறது. ஆருயிர் சகோதரரே வருக என முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.