Home இந்தியா புதுடில்லியில் ‘தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்பாடும்’ மாநாடு – முத்து நெடுமாறன்...

புதுடில்லியில் ‘தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்பாடும்’ மாநாடு – முத்து நெடுமாறன் உரை

257
0
SHARE
Ad

புதுடில்லி: இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் உலக மொழிகளில் தொழில் நுட்ப ஊடுருவலின் தாக்கமும், செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தெற்கு ஆசிய மொழிகளிலும், தென்கிழக்காசிய மொழிகளிலும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது, அதனைக் கொண்டு அந்த மொழிகள் எத்தகைய வளர்ச்சியும், மேம்பாடுகளும் அடைந்திருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் அனைத்துலக மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி புதுடில்லியில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டை சாம்வாட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து நடத்துகிறது.

இந்த மாநாட்டில் மலேசியாவின் முரசு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தோற்றுநரும், தமிழ் மொழியிலும், மற்ற பல அனைத்துலக மொழிகளிலும் எழுத்துருவியல் துறையில் முன்னணி வல்லுநராகத் திகழ்பவருமான கணிஞர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாநாட்டின் ஓர் அங்கமாக இடம் பெறவிருக்கும் கலந்துரையாடலிலும் முத்து நெடுமாறன், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும் விளக்கம் அளிப்பார்.

#TamilSchoolmychoice

‘புத்தாக்கமும் இணைப்பும் : உள்ளூர் ரீதியான மொழிவளர்ச்சிக்கான எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழ் நாட்டின் அய்லாசியா நிறுவனத்தின் தோற்றுநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆழி.செந்தில் நாதன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

சிங்கப்பூரிலிருந்து டேரியஸ் லியூ கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மைப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

எழுத்துருவியல் நுட்ப வல்லுநர்களும், மொழிகளுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த மாநாட்டில் பெருமளவில் கலந்து கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.