Home நாடு கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ் நூல்கள் – எழுத்தாளர் சங்க முயற்சிக்கு வெற்றி!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ் நூல்கள் – எழுத்தாளர் சங்க முயற்சிக்கு வெற்றி!

247
0
SHARE
Ad
மோகனன் பெருமாள்

கோலாலம்பூர் : நமது நாட்டில் தமிழ் இலக்கியம் பரவுவதற்கும், ஆழமாக வேரூன்றுவதற்கும் அயராத பணியாற்றி வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கீழ் இயங்கும் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள், “கடந்த 30.08.2024 கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையை, 24.09.2024-ஆம் நாளன்று கோலாலம்பூர் நூலக இயக்குனர் புவான் அனிதா ஜாலி அவர்களுக்கு விளக்கி கடிதம் கொடுத்திருந்தேன். கோலாலம்பூர் நூலகத்தில் தமிழ்ப் புத்தகத்திற்கு இடம் ஒதுக்க முதல் கட்டமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 100 புத்தகங்களை வழங்கும் என்று அமைச்சரிடம் தெரிவித்திருந்தோம் . அந்த 100 புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளவும் நூலகத்தில் வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்து இயக்குனர் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்” என அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக மேலும் கலந்து பேச ஒரு சந்திப்பு 4.10.2024 காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது என்பதையும் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

“கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கீழ் இயங்கும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களைக் கொண்டு சேர்த்த வரலாற்றுப் பூர்வமான பெருமை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையேச் சாரும். கூட்டரசுப் பிரதேச அமைச்சருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சரிடம் வலியுறுத்திய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் அவர்களுக்கு சங்கத்தின் நன்றி. அமைச்சருடனா சந்திப்பின் போதும் அதன் பின்னரும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற நமது முயற்சிக்கு உதவிய அமைச்சரின் சிறப்புச் செயலாளர் வழக்கறிஞர் சிவமலர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி” என்றும் மோகனன் தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்களுக்கு இடம் வேண்டும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முன்வைத்த கோரிக்கை குறித்த செய்தி வெளியிட்ட ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளிதழ்களுக்கும் மோகனன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எல்லோருக்கும் பொதுவான அமைப்பு. எல்லாத் தரப்பு தலைவர்களையும் சந்திக்கலாம். உறுப்பினர்களின் நலன்தான் பிரதானம் என்ற எனது கருத்தை ஏற்றுக் கொண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சருடனான சந்திப்பில் என்னோடு கலந்து கொண்ட, கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஆதரவு அளித்த செயலவை உறுப்பினர்களுக்கு நன்றி” எனவும் மோகனன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.