கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அகற்றப்படுவதாகவும், அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்திய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் வீற்றிருக்கும் இந்த ஆலயத்தை அகற்றக் கூடாது என பல இந்து-சமூக இயக்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்திய சமூகத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து இந்த ஆலயத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கண்டறிந்து தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் ஊடகங்களும் இந்த ஆலயம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை வெளியிட்டு வருகின்றன.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் தேசிய முன்னணி ஆட்சியில், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் ஜேக்கல் என்னும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டது.
தற்போது அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலைத் தாங்கள் சொந்த செலவில் நிர்மாணிக்கவிருப்பதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் நடைபெறும் என்றும் ஜேக்கல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆலயம் அகற்றப்பட்டாலும் அதற்கான மாற்று இடம் வழங்கப்படும் என மாநகர் மன்றம் அறிவித்தது.
எனினும் பல்வேறு இந்தியத் தலைவர்கள் ஏன் இவ்வாறு செய்யப்பட வேண்டும் – ஆலயம் அந்த நிலத்தில் இருப்பது தெரிந்தும் மாநகர் மன்றம் அந்த நிலத்தை விற்பதற்கு ஏன் முன்வந்தது – என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதை வெறும் ஆலயமாக மட்டும் பார்க்காமல் வரலாற்றுபூர்வ-பாரம்பரியத் தலமாகப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சில தலைவர்கள் அறைகூவல்கள் விடுத்துள்ளனர்.