புது டில்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் அனைத்துலக பாரதி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்றைய தொடக்க விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார் எனவும், பாரதி வாழ்ந்த இல்லத்தை ஜெயலலிதா, நினைவிடமாக மாற்றினார் என்றும் கூறினார். பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
அதனை அடுத்துப் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி. பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார். தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்து பேசியவர் பாரதி. பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி,” என்று தெரிவித்தார்.
இந்திய இளைஞர்கள் பாரதியாரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறினார்.