சென்னை, ஏப்ரல் 17- பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92 . மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, சங்கமம் ஆகிய படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றவர் ராமமூர்த்தி.