இஸ்லாமாபாத், ஏப்ரல் 17- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தானி தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாஸ்டன் நகரில் திங்கள்கிழமை நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள செய்தியாளர்கள் தொலைபேசி மூலம் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசானைத் தொடர்பு கொண்டனர். அப்போது, “அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதை தலிபான் அமைப்பு விரும்புகிறது. ஆனால், பாஸ்டன் குண்டு வெடிப்பில் அது ஈடுபடவில்லை. தலிபான் அமைப்பு தொடர்ந்து அமெரிக்காவைக் குறிவைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில், அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்தப் போவதாக எச்சரித்த தலிபான் அமைப்பு, நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் 2010இல் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றது. இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதியான ஃபைசல் ஷாசத் தனக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பயிற்சி அளித்ததாக காணொலி பதிவில் ஒப்புக் கொண்டார்.
இதனிடையே, பாஸ்டன் குண்டுவெடிப்பை பாகிஸ்தான் அரசு கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டு பாகிஸ்தான் மக்களும், அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைக் கண்டிப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.