
காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கும் நிலையில், தாலிபான்களின் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தங்களின் இராணுவத் தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்த காலகட்டத்தில் தாங்கள் பயன்படுத்திய இராணுவ மோப்ப நாய்களையும் அப்படியே விட்டு விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற சோகத் செய்தியையும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன (படம்).
சமூக ஊடகங்களில் தாலிபான்கள்
அமெரிக்க, நேட்டோ நாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய தருணத்தில், அரசாங்க இராணுவத்திற்கு எதிராகக் கடுமையானத் தாக்குதல்களை தாலிபான்கள் நடத்தினர்.
அதன் மூலம் ஆப்கான் அரசாங்கத்தையும் கைப்பற்றினர். தங்களின் இந்த முயற்சியில் இதுவரை தங்களின் வரலாற்றில் செய்யாத செயல் ஒன்றை அவர்கள் செய்து காட்டினர்.
சமூக ஊடகங்களில் தங்களின் செயல்பாடுகளை விவரித்ததுதான் அந்த செயல். இதன் மூலம் நடப்பு தாலிபான்கள் தங்களின் பழைய நடவடிக்கைகளில் இருந்து பெருமளவில் மாறியிருக்கின்றனர் என்பதைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த கால ஆப்கான் அரசாங்கத்தின் ஊழல்களையும், தோல்விகளையும் தாலிபான்கள் சமூக ஊடகங்களில் விவரித்ததோடு, தாங்கள் வெற்றி கொள்ளும் வட்டாரங்களின் நிலைமை குறித்தும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
தாலிபான்களின் இந்த மாற்றத்தைப் பிரதிபலித்திருக்கிறார் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா. பெருமளவில் தங்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைப் பின்பற்றும் தாலிபான்களுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சுமுகமான நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
பாஜக அமைச்சரவையில் முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா.
அமெரிக்காவின் வெளியேற்றம்
வெளியேறத் தொடங்கியது முதல் சில நாட்களில் சுமார் 120 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களையும் அமெரிக்காவுக்கு ஆதரவான ஆப்கானிஸ்தான் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது அமெரிக்கா.
கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமெரிக்க இராணுவம் செயல்பட்டு வந்தது. அமெரிக்கா வெளியேற்றத்தைத் தொடர்ந்து தற்போது இருபதே நாட்களில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருக்கிறது தாலிபான் இயக்கம்.
பஞ்ச்ஷீர் என்ற வட்டாரத்தில் நிகழ்ந்த இராணுவத் தாக்குதலோடு இறுதியில் அந்த வட்டாரத்தையும் வெற்றி கொண்டு கைப்பற்றியிருக்கிறது தாலிபான் அரசாங்கம்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal