கோலாலம்பூர் : ஆப்கானிஸ்தானை மீண்டும் ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்களுக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங் குரல் கொடுத்திருக்கிறார்.
தாலிபான்கள் சிறப்பான முறையில் மாற்றம் கண்டிருக்கின்றனர் என அவர் அந்த இயக்கத்தினரைத் தற்காத்தார்.
பாஸ் கட்சியின் அதிகாரத்துவ ஏடான ஹராக்கா டெய்லி பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் ஹாடி அவாங் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவரின் மகன் முகமட் காலில் அப்துல் ஹாடி இதற்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் “ஆப்கானிஸ்தானை விடுதலை செய்ததற்காக” தாலிபான்களைப் பாராட்டியிருந்தார்.
அவரின் அந்தப் பதிவைத் தொடர்ந்து முகமட் காலிலின் முகநூல் பக்கத்தை தற்காலிகமாக பேஸ்புக் நிறுவனம் முடக்கியது.
அதைத் தொடர்ந்து ஹாடி அவாங் ஹராக்கா டெய்லியில் வெளியிட்டிருக்கும் கட்டுரையில், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு மன்னிப்பு வழங்கியது, பலரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது போன்ற காரணங்களால் தாலிபான் இயக்கம் மாற்றம் கண்டிருப்பதைக் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.