துணை மக்களவைத் தலைவர் நியமிக்கப்படுவதற்கு எதிராகவும் துன் மகாதீர் மற்றொரு வழக்கை தொடுத்திருந்தார். அதன்படி அதனை தள்ளுபடி செய்ய அசலினா ஒத்மான் சையட்டின் விண்ணப்பத்தையும் நீதிபதி அகமட் கமால் முகமட் ஷாஹிட் அனுமதித்தார்.
நியமனம் தொடர்பான பிரச்சனையில் முடிவெடுக்கும் ஒரே அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
துன் மகாதீர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த ஜூலை 25-ஆம் தேதி, அசார் அசிசான் ஹருண், அசாலினா ஓத்மான் மக்களவைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட முக்ரிஸ் மகாதீர், டாக்டர் மஸ்லீ மலிக், அமிருடின் ஹம்சா மற்றும் ஷாருடின் சாலே ஆகியோர் இந்த வழக்கு மனுவை சமர்ப்பித்தனர்.
ஜூலை 13-ஆம் தேதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசார் அசிசான் முதல் பிரதிவாதியாகவும், அசாலினா இரண்டாவது பிரதிவாதியாகவும் இந்த வழக்கில் பெயர் குறிப்பிட்டப்பட்டனர். மற்றொரு துணை சபாநாயகரான முகமட் ராஷிட் ஹஸ்னோன் மற்றும் மக்களவை செயலாளர் நிஜாம் மைடின் பாஷா மைடின் முறையே மூன்றாவது, நான்காவது பிரதிவாதிகளாகவும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அசார் அசிசான் மற்றும் அசாலினா ஒத்மான் ஆகியோரின் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று அவர்கள் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இவர்களின் நியமனம் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.