கோலாலம்பூர்: அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து மொகிதின் யாசினுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகார மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“அவசரகால அறிவிப்பு அரசாங்கத்திற்கு அசாதாரண அதிகாரத்தை அளித்துள்ளது. செய்யப்படும் அனைத்தும் மாமன்னர் பெயரில் இருக்கும். அவற்றை விசாரிக்க முடியாது, அனைத்து நாடாளுமன்ற அமர்வுகளும் இரத்து செய்யப்பட்டதால் அவற்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவும் முடியாது. சட்ட விதி இரத்து செய்யப்பட்டுள்ளது. அவருடைய நோக்கங்கள் நல்லவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் முழுமையான அதிகாரம் வழங்கப்படும்போது, மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏற்படும்,” என்று மகாதீர் தமது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார்.
கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு, அவசரகால பிரகடனத்தின் மூலம் சதித்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றார்.
கொவிட் -19 பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியாது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.
சம்பவங்கள் அதிகரிப்பதன் காரணமாக சுகாதார அமைப்பிற்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விடுதிகளில் ஏற்படும் நெரிசல் அதிகரித்த தொற்றுநோயையும் பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
அவசரகாலத்தை அறிவித்தத அடுத்து மகாதீர் கடந்த வெள்ளிக்கிழமை மொகிதினை ஒரு சர்வாதிகாரி என்று கூறியிருந்தார்.