Home சமயம் கோலாகலமாக தொடங்கியது தைப்பூசம் – வெள்ளி ரதம் பத்துமலை வந்தடைந்தது.

கோலாகலமாக தொடங்கியது தைப்பூசம் – வெள்ளி ரதம் பத்துமலை வந்தடைந்தது.

1855
0
SHARE
Ad

Batu-Caves-temple-Sliderகோலாலம்பூர், ஜனவரி 26 – மலேசிய இந்தியர்களின் மத உணர்வையும், பக்தி மனப்பான்மையையும் உலகெங்கும் எடுத்துக் காட்டும் வண்ணம் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா பத்துமலையில் களை கட்டத் தொடங்கியுள்ளது.

நாளை 27ஆம் தேதிதான் தைப்பூசம் என்றாலும் கடந்த ஒருவாரமாகவே, பத்துமலையில் காவடி எடுப்பவர்களும், முடி இறக்குபவர்கள் மற்றும் காணிக்கை செலுத்துபவர்கள் என கூட்டம் அலைமோதத் தொடங்கி விட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாய்க் கோவிலான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வீற்றிருக்க, புறப்பட்ட வெள்ளி ரதம் இன்று சனிக்கிழமை பிற்பகல் பத்துமலையை வந்தடைந்தது.

#TamilSchoolmychoice

வழிநெடுகிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளி ரதத்துடன் நடந்து வந்து பத்துமலையை சென்றடைந்தனர். ஆயிரக்கணக்கான தேங்காய்கள் முருகப் பெருமானின் வெள்ளி ரதம் வரும் வழியெங்கும் உடைக்கப்பட்டன.

பாதை நெடுகிலும் ஏராளமான தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு நடந்து செல்லும் பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்களும், பானங்களும் வழங்கப்பட்டன.

பத்துமலையில் பெரிய அளவிலான காவடிகளும் அணிவகுத்து முருகப் பெருமானின் திருத்தலத்தை நோக்கி படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கியுள்ளன.

பத்துமலை வளாகம் எங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இலவச பானங்கள், மோர், மற்றும் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தைப்பூசத்திற்கு வரும் பக்தர்களுக்காக ரயில் சேவைகளும் கூடுதலாக நடத்தப்படுகின்றன. சிறப்பு பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று பத்துமலைத் தைப்பூசத்தில் கலந்து கொள்ள துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் வருகை தரவிருக்கின்றார். பிரதமர் நஜிப், சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதால், அவருக்கு பதிலாக துணைப் பிரதமர் மொய்தீர் இந்த முறை தைப்பூச விழாவில் கலந்து கொள்கின்றார்.

அவருடன் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு மற்றும் பல அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.