ஜோர்ஜ் டவுன் : கெடாவில் உள்ள இந்து கோவில்களின் அழிப்பு என்பது அதன் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் ஒரு களங்கமாகும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடியுள்ளார்.
“கெடா, சுங்கைப்பட்டாணியில் மூன்றாவது இந்து கோயிலை உடைக்க குறி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில், கெடா மாநிலத்தில் இரண்டு இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன. அலோர்ஸ்டாரில் ஒரு பாரம்பரிய கோயில் முதலில் உடைக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து கூலிமில் ஒரு ஆலயம் உடைக்கப்பட்டது. குறிப்பாக அரசு அல்லது தனியார் நிலத்தில் அமைந்துள்ள இந்து கோவில்களை இடிக்க கெடா பாஸ் அரசாங்கம் திட்டமிட்ட அணுகுமுறையை கையாள்வதாகத் தெரிகிறது. இத்தகைய சம்பவங்கள் வெறும் தற்செயலாக நடப்பவையல்ல மாறாக மாநில அரசாங்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக அமல்படுத்தப்படுகின்றன” என இராமசாமி தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
“கெடா மாநில பாஸ் அரசாங்கம் , “சட்டவிரோதமாக கட்டப்பட்டவை” என்ற சாக்கில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் குறி வைப்பதாக எண்ணத் தோன்றுகிறது. சகிப்புத்தன்மையற்ற தீவிரவாத தலைமைத்துவத்தைக் கொண்ட கெடா மந்திரி பெசார் முகமது சனுசி இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவவில்லை.
வரும் காலங்களில் மேலும் மேலும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லாமல் சனுசி ஒருதலைப்பட்சமாக தைப்பூச விடுமுறையை இரத்து செய்ய முடிந்தால், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் எதிர்காலத்தை குறிப்பாக தனியார் நிலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்துகொள்ளலாம்” என்றும் இராமசாமி தனது பதிவில் குறிப்பிட்டார்.
“இந்திய சமூகத்தின் மீது மரியாதை இல்லாத மந்திரி பெசாருக்கு, இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதம் எனக் கருதி மாற்று வழிபாட்டுத் தலங்களுக்கு மாற்று இடம் வழங்குவார் என்று நினைத்துப் பார்ப்பது கடினம். சுங்கைப்பட்டாணி ஜாலான் அவாம் பாண்டார் முத்தியாரா பிட்ஸா ஹட் அருகாமையில் உள்ள இந்து கோவிலுக்கு சுங்கை பட்டாணி மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.பி) ஆலயத்தை அகற்றுவதற்கான உத்தரவுக் கடிதத்தை (நோட்டீஸ்) வழங்கியுள்ளது. இந்த நோட்டீசை 15 மார்ச் 2021 இல் எம்.பி.எஸ்.பி.யின் அமலாக்கப் பிரிவு வழங்கியுள்ளது. கெடாவில், நகர மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இந்து கோவில்களை அழிப்பதில் அரசின் பயங்கரமான ஆயுதங்களாக உருவெடுத்துள்ளன. இந்த கோயில் இடிக்கப்படுவதற்கான தேதிக்கு முன்பாக மூன்று நாட்களே அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. வேறு வகையில் சொல்லுவதானால், மார்ச் 18 க்குள் கோயில் அகற்றப்படாவிட்டால், மார்ச் 19 அன்று அமலாக்க நடவடிக்கை பிரிவினரால் ஆலயம் உடைக்கப்படலாம். அமலாக்க நடவடிக்கை என்பது கோயிலின் கட்டமைப்புகள் தெய்வ சிலைகள் ஆகியவை பலவந்தமாக இடிக்கப்படும் என்பதாகும். அலோர்ஸ்டாரில் உள்ள இந்து கோவில் உடைப்பு விஷயத்தில் இதுதான் நடந்தது” என்றும் இராமசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.
“சுங்கை பட்டாணியில் உள்ள கோவிலை அகற்றுவதற்கான நோட்டீஸில் அமலாக்க அதிகாரி மொஹமட் பௌசி பின் மொஹமட் அஹாடிம் என்ற பெயரில் கையெழுத்திட்டுள்ளார். அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட பகுதியில் கோயில் கட்டப்பட்டதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் பெயர் மற்றும் அதை நிர்வகிக்கும் நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த கோயில் இடிக்கப்பட்டால், அது இனவெறி மற்றும் மத தீவிரவாத கெடா பாஸ் அரசாங்கத்தால் அழிக்கப்படும் மூன்றாவது கோயிலாகும்” எனவும் இராமசாமி தெரிவித்தார்.
பி.என் அரசாங்கத்தில் பாஸ் கட்சி அரசாங்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், கெடா அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனத்தைத் தடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்றும் இராமசாமி சாடினார்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ விஜயாவின் பண்டைய இந்து பௌத்த நாகரிகத்தைப் பற்றி பெருமை கொண்ட கெடா போன்ற அரசுக்கு, இந்து கோவில்களின் அழிப்பு அதன் புராதன கடந்த கால வரலாற்றுக்கு ஒரு களங்கமாகும் என்றும் இராமசாமி மேலும் தனது பதிவில் தெரிவித்தார்.