Home இந்தியா பிரசாந்த் கிஷோர், தனது தொழிலைக் கைவிடுவாரா?

பிரசாந்த் கிஷோர், தனது தொழிலைக் கைவிடுவாரா?

588
0
SHARE
Ad
பிரசாந்த் கிஷோர்

(எதிர்வரும் மே 2-ஆம் தேதி இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. அவற்றில் உலகத் தமிழர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுவது தமிழ் நாட்டுத் தேர்தல். ஆனால், இந்தியா முழுமையிலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுவது மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். காரணம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளால் தனது தொழிலையே கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்திருப்பதுதான். அதற்குக் காரணம் என்ன? பின்னணி என்ன? விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

பிரசாந்த் கிஷோர்!

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்பட்ட நாள் முதலாக அனைத்து அரசியல் வட்டாரங்களில் பிரபலமாக அடிபட்ட பெயர்!.

#TamilSchoolmychoice

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்காக திமுகவால் தேர்தல் வியூகப் பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் நியமிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் மேற்கு வங்காளத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. அங்கு 8 கட்டமாக வாக்களிப்புகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கான முடிவுகளும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே மே 2-ஆம் தேதிதான் வெளியாகின்றன.

மேற்கு வங்காளத்தில் மூன்றாவது தவணையாக வெற்றி பெற முனைந்திருக்கிறார் நடப்பு முதலமைச்சர் – திரிணாமுல் காங்கிரசின் தலைவர் – மம்தா பானர்ஜி.

அவருக்கும் அவரின் திரிணாமுல் காங்கிரசுக்கும் தேர்தல் வியூகப் பொறுப்பாளரும் பிரசாந்த் கிஷோர்தான். இதற்காக இரண்டு மாநிலத் தரப்புகளின் அரசியல் கட்சிகளும் கோடிக்கணக்கான பணத்தை பிரசாந்துக்கு வாரி இறைத்திருக்கின்றன.

இப்போது பிரச்சனை என்னவென்றால், மேற்கு வங்காளத் தேர்தல் முடிவுகளால் பிரசாந்த் தனது தொழிலையே விட்டு விட்டு விலகி விடலாம் என்பது போன்ற சூழ்நிலைகள் எழுந்துள்ளன.

ஏன் எழுந்தது இந்த சூழல்? என்ன நடந்தது?

பாஜக 100 தொகுதிகளைத் தாண்டாது என சூளுரைத்த பிரசாந்த் கிஷோர்!

மேற்கு வங்காளம் 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என சிலவாரங்களுக்கு முன்னரே அடித்துக் கூறினார் பிரசாந்த் கிஷோர்.

இதுகுறித்து இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் பிரசாந்த். அப்போது, பாஜக 100 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறாது என பேட்டி எடுத்த பத்திரிகையாளரிடம் சவால் விட்டார்.

“அப்படி பாஜக வெற்றி பெற்றால்…” என பேட்டி எடுத்தவர் எதிர்கேள்வியால் கொக்கி போட்டார்.

“நான் இப்போது செய்து கொண்டிருக்கும் எனது தொழிலையே கைவிட்டு விடுகிறேன்” என உறுதிபடத் தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர். இந்தியா டுடே பத்திரிகையாளர் மீண்டும் நெருக்க, தனது சவாலில் உறுதியாக இருந்தார் பிரசாந்த்.

அடுத்தடுத்த நாட்களில் மேற்கு வங்காள மாநில அரசியல் அரங்கில் காட்சிகள் மாறின. நரேந்திர மோடி, அமித் ஷா கூட்டணியின் அதிரடி பிரச்சாரங்களால் அங்குள்ள வாக்காளர்கள் இந்த முறை பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

மேற்கு வங்காளத்தின் பெரும்பான்மை இந்துக்களும், பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்து வந்த வாக்காளர்களும் இந்த முறை பாஜக பக்கம் சாய்வார்கள் என்ற கணிப்பால் நிலைமை பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.

இப்போது இந்தியா முழுமையிலும் தகித்துக் கொண்டிருக்கும் வெப்பமான கேள்விக் கணை, பிரசாந்த் கூறி வருவதைப் போல் – “மேற்கு வங்காளத்தில் பாஜக 100 தொகுதிகளைத் தாண்டுமா?” – என்பதுதான்!

பத்திரிகையாளர் சந்திப்பில் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்த பிரசாந்த்

சில நாட்களுக்கு முன்னர் புதுடில்லியில் “கிளப் ஹவுஸ்” என்ற பத்திரிகையாளர்களுக்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டார் பிரசாந்த் கிஷோர். இரகசியமான கலந்துரையாடல் என்பதால் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்படாது என்ற எண்ணத்தில் அவர் அந்தக் கலந்துரையாடலில் சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

“மோடிக்கு நான் நினைத்ததை விட அதிகமான செல்வாக்கு மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. அவரை ஒரு வழிபாட்டுக்குரிய தலைவர் போன்று மக்கள் போற்றுகின்றனர். இந்துக்கள் அனைவரும் அவர் பக்கம் சாய்வார்கள் என நினைக்கிறேன். மம்தா பானர்ஜி இரண்டு தவணைகளாக முதல்வராக இருந்து விட்டதால் அவருக்கு எதிரான சூழல் உருவாகியிருக்கிறது” – இவைதான் பிரசாந்த் ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்ட சில முரண்பாடான கருத்துகளின் சாராம்சம்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒரு பத்திரிகையாளர் பிரசாந்த் பேசியதை பதிவு செய்து வெளியிட்டு விட்டார். அந்த உரையாடல் பகுதிகளை பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடங்களில் பகிரங்கமாக்கி விட்டது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் இணைய ஊடகங்களில் தெறிக்கும் விவகாரம் இதுதான்.

எல்லா அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பிரசாந்த் கருத்துகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

பிரசாந்த் தொழிலை விட்டு விடுவாரா?

எட்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு வங்காளத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடும் என்ற அளவுக்கு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனவே, மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 100 தொகுதிகளுக்கும் கூடுதலாக பாஜக கைப்பற்றுவதில் சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2014-ஆம் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த். அப்போது மோடியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே பிரசாந்தின் வியூகம்தான் எனப் பெரிதுபடுத்தப்பட்டது.

அடுத்தடுத்து பல மாநிலத் தேர்தல்களில், பல கட்சித் தலைவர்களுக்கு தனது வியூகத் திறனை வழங்கினார். சிலவற்றில் வெற்றி என்றாலும் சில தேர்தல்களில் தோல்வியும் கண்டார்.

இப்போது, அதே மோடிக்கு எதிராக,  இரண்டு மாநிலங்களில் தனது வியூகத்தைப் பயன்படுத்துகிறார் பிரசாந்த்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு தேர்தலின் முடிவுகளை உன்னிப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால், இந்திய அளவில் அனைத்து அரசியல் வட்டாரங்களின் பார்வையும் பரபரப்பாகப் பதிந்திருப்பது மேற்கு வங்காளத்தின் தேர்தல் முடிவுகள் மீதுதான்!

பிரசாந்த் கணிப்புப்படி 100 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாத நிலைமைக்கு பாஜக தள்ளப்படுமா?

அல்லது 100 தொகுதிகளுக்கும் கூடுதலாக பாஜக வெற்றி பெற்றால், அதன் காரணமாக சவால்விட்டபடி பிரசாந்த் தனது வியூகம் வகுக்கும் தொழிலையே கைவிட்டு ஒதுங்குவாரா?

இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கணிப்பையும் மீறி பாஜக மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்க முடியுமா?

போன்ற கேள்விகளால் மேற்கு வங்காளத்தின் அரசியல் கள வெப்பத்தின் தகிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

-இரா.முத்தரசன்