Home நாடு “மலேசியா-தமிழ் நாடு நல்லுறவுகள் வளர்க்கப் பாடுபடுவோம்” – ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம்

“மலேசியா-தமிழ் நாடு நல்லுறவுகள் வளர்க்கப் பாடுபடுவோம்” – ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம்

437
0
SHARE
Ad

கோலாலம்பூர் :தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துகளையும், மஇகா சார்பிலான வாழ்த்துகளையும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் நேரடியாக அனுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதற்கும், தங்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கவிருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

விக்னேஸ்வரன் – ஸ்டாலின் (கோப்புப் படம்) சென்னையில் 2019-இல் சந்தித்தபோது…

எதிர்வரும் மே 7-ஆம் தேதி தாங்கள் தமிழ் நாடு முதலமைச்சராகப் பதவியேற்கவிருப்பது குறித்து எனது நல்வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் இவ்வேளையில் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என விக்னேஸ்வரன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தமிழர்களுக்கான துறைக்கு ஆதரவு

“கடந்த முறை நானும் என் கட்சியினரும் சென்னை வந்தபோது தங்களைச் சந்தித்ததும் தாங்கள் வழங்கிய விருந்தோம்பலும், வரவேற்பும் இன்னும் என் நினைவுகளின் இனிமையான சம்பவங்களாக நிழலாடுகிறது. தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் “வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்” என தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்திருந்தீர்கள். தங்களின் இந்த சிறப்பான வாக்குறுதியை வரவேற்கிறேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் தமிழ் நாடு அரசாங்கத்திற்கு என்னால் இயன்ற ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கவும் தயாராக இருக்கின்றேன்” என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டார்.

விக்னேஸ்வரன் – ஸ்டாலின் (கோப்புப் படம்) சென்னையில் 2019-இல் சந்தித்தபோது…

“மலேசியாவில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதிக்கும்  அரசியல் கட்சியாகத் திகழும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில், தங்களின் தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கும் எங்களின் மலேசிய நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் நல்லுறவுகளும், சிறந்த தூதரக அணுகுமுறைகளும் பேணப்பட எல்லா வகையிலும் நாங்கள் பாடுபடவும் ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருக்கின்றோம். தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் திமுக சிறந்த முறையில் தமிழ் நாட்டிற்கு நல்லாட்சி வழங்கவும், தமிழ் நாடும் தமிழர்களும் வாழ்க்கைத் தரத்திலும், கல்வி, பொருளாதாரம், வணிகம் போன்ற துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியும் மேம்பாடும் காணவும் எனது தனிப்பட்ட சார்பிலும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பிலும் எனது நல்வாழ்த்துகளை இந்தக் கடிதத்தின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் – ஸ்டாலின் (கோப்புப் படம்) சென்னையில் 2019-இல் சந்தித்தபோது…

தொடர்ந்து மலேசியத் தமிழர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான நல்லுறவுகளும், பரிமாற்றங்களும் தங்களின் நல்லாட்சியின் கீழ் சிறப்புறத் தொடரும் என்றும் விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.