Home நாடு “பெற்றோர்களை இறுதிவரை பேணிக் காக்க வேண்டும்” – விக்னேஸ்வரன் தந்தையர் தின செய்தி

“பெற்றோர்களை இறுதிவரை பேணிக் காக்க வேண்டும்” – விக்னேஸ்வரன் தந்தையர் தின செய்தி

535
0
SHARE
Ad

தந்தையர் தினத்தை முன்னிட்டு  மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதும் தந்தையர்களின் தியாகங்களையும், பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெற்று வளர்த்து பேணிக் காக்கும் தாயின் அர்ப்பணிப்புக்கு உலகத்தில் எதுவும் ஈடாகாது. என்றாலும், பின்னணியில் இருந்து நம்மையறியாமல் நம்மை இயக்கி, நமக்காக உழைக்கும் தந்தையரின் சேவைகளையும் தியாகங்களையும் நாம் மறந்து விட முடியாது.

தாயார் நமது கண்கண்ட தெய்வம் என்றாலும், நமது கண்ணுக்குத் தெரியாத விதமாக ஒவ்வொரு தந்தையும் ஏதோ ஒரு வேலையில், தொழிலில் ஈடுபட்டு தனது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் உடலை வருத்தி எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

பொதுவாக தந்தையர்கள் குடும்பத்துக்கான தங்களின் உழைப்பையும், அர்ப்பணங்களையும் வெளியில் சொல்வதில்லை. அதைக் கடமையாகவே நினைப்பார்கள்.

ஆனால் எப்போதும் தங்களின் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், அவர்களும் தன்னைவிட வாழ்க்கையில் நன்றாக உயர வேண்டும், அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்ற எண்ணமே தந்தையர்களின் மனங்களில் மேலோங்கி இருக்கும்.

அதனால்தான், தாய் பத்து மாதங்கள் சுமக்கிறாள், தந்தையோ வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளை மனங்களில் சுமக்கிறார் என்று கூறுவார்கள்.

எனவே, இன்றைய இளைஞர்கள் தங்களின் தந்தையர்களின் தியாகங்களை தந்தையர் தினத்தன்று மட்டும் நினைவு கூர்வதை வழக்கமாகக் கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் பெற்றோர்களைப் பாதுகாப்பதைத் தங்களின் கடமையாகக் கொள்ள வேண்டும்.

தங்களின் பெற்றோர்களை எந்த சூழ்நிலையிலும் முதியோர் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப மாட்டேன் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்நாள் சபதமாகவே கொள்ள வேண்டும்.

கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இந்த முறை தந்தையர் தினத்தை வெளியிடங்களுக்கு சென்றோ, உணவகங்களுக்கு சென்றோ கொண்டாட முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம்.

எனினும், இதையே நல்லதொரு வாய்ப்பாகக் கருதி விடுகளிலேயே இருந்து குடும்பத்தினருடன் ஒன்றாக சமைத்து உணவருந்தியோ, அல்லது சிறப்பான உணவு வகைகளை இல்லங்களுக்குத் தருவித்தோ கொண்டாடி மகிழ்வோம்.

வெளியூர்களிலும் அயல்நாடுகளிலும் இருப்பவர்கள் தங்களின் தந்தையருக்கு தொலைத் தொடர்பு வசதிகள் மூலம் தவறாது தொடர்பு கொண்டு நன்றி தெரிவியுங்கள். வாழ்த்து கூறுங்கள். முடிந்தால் தந்தையருக்குப் பிடித்தமான உணவையோ, பொருளையோ பரிசாக அனுப்புங்கள்.

பெற்றோர்களை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் மனம் கோணாமல் போற்றுங்கள். உங்களின் வாழ்க்கையும் செழிப்பாகும். நீங்களும் சிறப்பாக வாழ்க்கையில் உயர்வீர்கள்.

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.