புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- அமைச்சரவை மாற்றத்திற்கு வழிவிடும் பொருட்டு 12 அமைச்சர்கள் இந்திய அதிபரிடம் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
- பதவி விலகும் முக்கிய அமைச்சர்களில் ரவி சங்கர் பிரசாத் ஒருவராவார். இவர் தகவல் தொழில்நுட்பம், சட்டத்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார்.
- சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பதவி விலகியுள்ளார். கொவிட் பாதிப்புகளை எதிர்கொள்ள திறன்வாய்ந்த சுகாதார அமைச்சர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா பதவி விலகியுள்ளார். இவர் இராசயன, உரத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
- கடந்த மோடி அமைச்சரவையின் தகவல், ஒளிபரப்பு அமைச்சராகப் பதவி வகித்து வந்த பிரகாஷ் ஜவடேகரும் பதவி விலகியுள்ளார்.
- தமிழக பாஜக தலைவரும் வழக்கறிஞருமான எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- காங்கிரசின் முன்னாள் முக்கியத் தலைவரும் ஒரு காலத்தில் ராகுல் காந்தியின் நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தவருமான ஜோதிராத்யா சிந்தியாவும் அமைச்சர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இவர் அண்மையில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
- துணை நிதியமைச்சராகப் பதவி வகித்த அனுராக் தாகூர் அமைச்சராகப் பொறுப்பேற்கும் புதிய அமைச்சர்களில் முக்கிய முகமாகப் பார்க்கப்படுகிறார்.
- இன்று மாலை இந்திய நேரப்படி 6.00 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 8.30 மணி) புதிய அமைச்சரவை பதவியேற்கிறது.
2019-இல் மீண்டும் பிரதமராக, இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தான் அமைத்த அமைச்சரவையை இப்போதுதான் மோடி பெரிய அளவில் மாற்றி அமைத்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் எந்தவித முக்கிய அமைச்சரவை மாற்றத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களோடு சந்திப்பு நடத்தியபின்னர் மோடி புதிய அமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கினார்.
தேர்வுகள் இறுதி செய்யப்பட்டு இன்று புதன்கிழமை மாலை (இந்திய நேரப்படி) 6.00 அதிபர் மாளிகையில் பதவியேற்கவிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தாண்டு இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அதற்குத் தயாராகும் பொருட்டும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டும் மோடி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.