கோலாலம்பூர் : தன் மீதான ஊழல் வழக்குகளில் தலையிட பிரதமர் மொகிதினுக்கு நெருக்குதல் தந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
“நான் எப்போது மொகிதினைச் சந்தித்து எனது நீதிமன்ற வழக்கில் தலையிடச் சொன்னேன் என்பதை தைரியமிருந்தால் யாராவது போலீஸ் புகார் செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் நஜிப் சவால் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அளித்துள்ள நீண்ட விளக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறைதான் தான் மொகிதினைச் சந்தித்ததாகவும் அதுவும் ஊழியர் சேமநிதி பணத்தை பொதுமக்கள் மீட்பது தொடர்பான சந்திப்பு என்றும் நஜிப் கூறியுள்ளார்.
அந்தச் சந்திப்பின்போது, “எனது உயர்நீதிமன்ற வழக்கில் நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி அனுபவமில்லாதவர். சிவில் வழக்குகளில் நீதிபதியாக இருந்தவர், என்பது உங்களுக்கு தெரியுமா?” என்றுதான் மொகிதினிடம் கேட்டேன். அது கூட இரகசியமல்ல. இந்த விவகாரத்தை நான் எனது முகநூல் பக்கத்திலேயே தெரிவித்தேன். பின்னர் எனது வழக்கின் மேல்முறையீட்டிலும் ஒரு வாதமாக முன்வைத்தேன்” என நஜிப் மேலும் தெரிவித்திருக்கிறார்.