(நாட்டில் எழுந்திருக்கும் அரசியல் பிணக்குகள் பிரதமர் மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா – இல்லையா என்ற விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. அது குறித்து தனது கண்ணோட்டத்தில் அலசுகிறார், பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னால் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)
பிரதமராக டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் பொறுப்பேற்றது முதலே அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையென்ற குற்றச்சாட்டைச் சொல்லி வருவதோடு அவர் அமைத்த பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கமும் பின் கதவு வழி வந்த அரசாங்கம் என்று ஒரு சிலர் குறிப்பாக எதிர்கட்சியினர் இன்னும் வர்ணித்து வருவது நாடறிந்ததே.
நாட்டில் நடந்தேறிய 14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 7-ஆவது பிரதமராகப் பதவியேற்றத் துன் மகாதீர் முகமது, தான் வகித்தப் பிரதமர் பதவியைத் திடீரென ராஜினாமா செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகக் கணிக்கப்பட்ட மொகிதினை நாட்டின் 8-ஆவது பிரதமராக நியமித்தார் மேன்மை தங்கிய பேரரசர். நாட்டின் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில்தான் மேன்மை தங்கிய பேரரசர் இந்நியமனத்தைச் செய்தார்.
இதற்கிடையே நாட்டில் காட்டுத் தீயைபோல் அதிவேகத்தில் பரவிய கோவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாமன்னரின் அனுமதியுடன் இவ்வாண்டு ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஆகஸ்டு 1 ஆம் திகதி வரை அவசரகாலச் சட்டம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் காலாவதியாகும் திகதிக்கு முன்பே அவசரகால ஓர்டினன்சை ஜூலை 21 ஆம் திகதியோடு முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்து மாமன்னருக்கும் முறைப்படி அறிவித்தது. இம்முடிவினை மாமன்னரின் அனுமதி கிடைப்பதற்கு முன்பே அரசாங்கம் அறிவித்து விட்டதாகப் பிறகு இஸ்தானா நெகாரா அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இதன் தொடர்பாக மாமன்னருக்கும் அரசாங்கத்திற்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளதாகப் பேசப்பட்டும் வருவது நாம் அறிந்ததே.
அதோடு, இந்நாடாளுமன்றக் கூட்ட நடைமுறை சட்டம் 11-ன் ( standing order) அடிப்படையில் இக்கூட்டம் இம்முறை நடைபெறுவதால் இதற்கு விசேச நிகழ்ச்சி நிரலுண்டு. இந்த நிகழ்ச்சி நிரலில் அவசரகால சட்ட விவாதம் இடம் பெறவில்லை, மாறாக , அரசாங்கத்தின் பொருளாதார மீட்பு திட்ட அறிக்கை பிரதமரால் சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி நிரல் மட்டுமே இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சி நிரலில் அவசரகாலச் சட்ட விவாதம் இடம் பெறாததால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதம் செய்ய சபாநாயகர் இடம் தரவில்லை.
சபாநாயகரின் இம்முடிவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாடாளுமன்றத்தில் சலசலப்பை உருவாக்கியது.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஒரு சிலருக்குக் கோவிட் தொற்றுக் கண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதால், நாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதோடு நாடாளுமன்றமும் பாதுகாப்புக் கருதி 2 வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுமென அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம் எடுத்த இந்த முடிவினை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமருக்கு எதிரான ஒரு எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த எதிர்ப்புக்கூட்டத்தில் பிரதமருக்கு எதிரான பல்வேறு குற்றச் சாட்டுக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பிரதமர் மாமன்னரை அவமதித்ததாகவும் பெரும்பான்மை இல்லாமல் தொடர்ந்து பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதனிடையே பிரதமருக்கு எதிராக நடத்தப்பட்டப் பேரணியில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் இதுவரை பிரதமருக்கு ஆதரவு வழங்கி வந்த 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவினை வாபஸ் பெறுவதாகவும் பரவலாகச் செய்தி பரவியது. இதன் அடிப்படையில் மொகிதீன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்டாரெனும் தோற்றம் மக்கள் மத்தியில் உருவானது எனலாம்.
இது உண்மையா? அல்லது வெறும் அரசியல் இலாபத்திற்காகப் பரப்பப்படும் பிரச்சாரமா? எனப் பேசப்படுகிறது
இதற்கிடையே வாராந்திர கூட்டத் தொடரில் மாமன்னரைச் சந்தித்த மொகிதின் தனக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிரூபிக்கப் போவதாக உறுதி வழங்கியுள்ளார். நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் வழக்கை எதிர்நோக்கி வரும் ஒரு சில அரசியல் தலைவர்கள் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட்டு உதவும்படி தன்னை நெருக்குவதாகப் பகிரங்க அறிவிப்பையும் செய்ததோடு வெறும் 8 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான் தமக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டனர் எனத் தெளிவுபடுத்தினார்.
மொகிதீன் தலைமைத்துவத்திற்கு ஆதரவு குறைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபா,சரவாக்கில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மொகிதின் தலைமைத்துவத்திற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே, நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை உண்டென்பதை மொகிதீன் நிரூபிக்க முடியுமா?
காத்திருப்போம்!