கோலாலம்பூர்,ஜன.28- தைப்பூசத் திருவிழா நாடளாவிய நிலையில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு வருகை புரிந்த துணைப்பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் பத்துமலை வளாகத்தில் கலைக்கூடம் அமைக்க 10 லட்சம் வெள்ளி மானியத்தை வழங்கினார்.
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அவர்கள் கலைக்கூடம் அமைக்க 20 லட்சம் வெள்ளி மானியம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். அத்தொகையின் ஒரு பகுதியாக 10 லட்சம் வெள்ளியை சனிக்கிழமை துணைப்பிரதமர் தேவஸ்தான தலைவர் டத்தோ ஆர்.நடராஜாவிடம் வழங்கினார்.
மானியத்தை வழங்கிய பின் உரையாற்றிய துணைப்பிரதமர் தேசிய முன்னணி சொன்ன வாக்குறுதிகளை எப்பொழுதும் நிறைவேற்றி வருவதாகவும், அதே வேளை இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றார்.
மானியத்தை பெற்று கொண்ட தேவஸ்தான தலைவர் டத்தோ நடராஜா, பிரதமர் வாக்குறுதி வழங்கியதுபோல் கலைக்கூடம் எழுப்ப முதல் கட்டமாக 10 லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இம்மானியம் வழங்கப்பட்டபோது ம.இ.கா.தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல், துணைத்தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.