சென்னை,ஜன.28- வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகவும் கூறி இதை தடுப்பதற்கான அனைத்து சமுதாய பேரியக்கத்தின் சென்னை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம், தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலை இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் போக் சாலை சந்திப்பில் உள்ள ம.பொ.சி.சிலை அருகே சுமார் 12 மணியளவில் திரண்டனர்.அவர்கள் ராமதாசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு திருமண மண்டபத்தை முற்றுகையிட முயன்றனர்.
உடனே அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர். முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு எதிராகவும், பாமகவினருக்கு எதிரா கவும் கோஷம் எழுப்பினர்.உடனே 50க்கும் மேற்பட்ட பாமகவினர் ம.பொ.சி. சிலை அருகே ஆர் ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும், ராமதாசுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.
சிறிது நேரத்தில் ராமதாசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர்கள் பாமகவினரை நோக்கி கற்களை எடுத்து வீசினர். தகவல் அறிந்து வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் முத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமகவினரை அமைதிபடுத்தி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.இதற்கிடையில் ஆர்ப்பாட்டகாரர்கள் வீசிய கல் மணிபாரதி என்ற போலீஸ்காரரின் தலையில் பட்டு, ரத்தம் பீறிட்டது.