சென்னை,ஜன.28-கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. அந்த அணியின் இயான் பெல் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
முதலில் பேட் செய்த இந்தியா 49.4 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 47.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்தியா தடுமாற்றம்:
கடும் பனிப்பொழிவு காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதை இங்கிலாந்து விளையாட்டாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
கடைசி ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், முந்தைய 3 ஆட்டங்களிலும் வென்றிருந்ததால் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
தரவரிசையில் முதலிடம்:
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் 119 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணியும் 119 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெசிமல் புள்ளி அடிப்படையில் இந்தியாவைவிட பின்தங்கியுள்ளது. இதனால் அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது.
போலி டிக்கெட்டுகள்: இந்த ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களிடம் இருந்து 50 போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ரூ.1,000 முதல் ரூ.5000 வரையிலான மதிப்புடைய டிக்கெட்டுகள் ஆகும்.