கோலாலம்பூர்,ஜன.28- ஓவியம் வரைவது என்பது ஒரு கலை. அக்கலையில் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டவர் ஓவியர் டாக்டர் எஸ்.சந்திரன். 30 ஆண்டுகளுக்கு மேல் தான் படைத்த ஓவியங்களை ஒன்று திரட்டி “வண்ணங்களுக்கு அப்பால்” என்ற புத்தகத்தை தயாரித்துள்ளார்.
சந்திரனின் ஓவியம் மட்டுமல்லாமல் உலக ஓவியர்கள் பற்றிய தகவல்களை வண்ணங்களுக்கு அப்பால் புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளார். இப்புத்தகம் படிப்பதற்கல்ல… பார்ப்பதற்கு என்று கூறும் இவர், அந்த காலத்து ஓவியங்களும் இடம் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.
இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் மார்ட்ன் ஆர்ட் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பதோடு, வண்ணங்களுக்கு அப்பால் நூலில் அனைத்து தரப்பினருக்கும் அறிந்து கொள்ள பல விஷயங்கள் அடங்கியுள்ளன என்கிறார்.
நடனம், பாட்டு, வீணை என்று ரசிப்பவர்கள் மத்தியில் ஓவியங்களை ரசிக்கும் ரசிகர்களின் ரசனை மாறுப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஓவிய கலைக்கூடம் ஒன்றை நடத்தி வரும் ஓவியர் சந்திரன் பலருக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஓவியர் சந்திரனின் வண்ணங்களுக்கு அப்பால் நூல் வரும் 30ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) மண்டபத்தில் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் வெளியீடு காணவுள்ளது. தகவல் – தொடர்பு – கலாச்சாரதுறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டி குருஸ் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறும்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தமிழ் திரையுலகில் பிரபலமான தங்கர் பச்சான் சிறப்பு வருகை புரியவுள்ளார். மேல் விவரங்களுக்கு: சந்திரன் 016-3777608.