டாக்கா, ஏப்ரல் 23- வங்கதேச அதிபராக அந்நாட்டின் முன்னாள் மக்களவைத் தலைவர் அப்துல் ஹமீது ( வயது 69) போட்டியின்றி திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வங்கதேச அதிபராக இருந்த ஜில்லுர் ரஹ்மான், சிறுநீரகக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். அதனால் மக்களவைத் தலைவர் அப்துல் ஹமீது (படம்) கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி தாற்காலிக அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி ஜில்லுர் ரஹ்மான் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஆளும் அவாமி லீக் கட்சி ஈடுபட்டது. இதில் நாட்டின் மூத்த அரசியல்வாதியும் தாற்காலிக அதிபருமான அப்துல் ஹமீதைத் தேர்ந்தெடுக்க ஆளும் கட்சி சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அப்துல் ஹமீது வங்கதேசத்தின் 20-ஆவது அதிபராக திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
“அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது சிறந்த நிர்வாகத்திறன் உடையவர். 54 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். இந்தப் பதவிக்கு முழு தகுதி உடையவர். நாட்டின் வளர்ச்சிக்காக தன்னுடைய ஆற்றலை அவர் சிறப்பாகப் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது” என அவாமி லீக் கட்சி தெரிவித்துள்ளது.