டாக்கா – சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா இயக்கங்களுடன் தொடர்புடைய 27 வங்கதேசக்கட்டிடத் தொழிலாளர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது பற்றி, சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நேற்று தான் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஏற்கனவே தாய்நாட்டிற்கு கடத்தப்பட்ட அவர்களில், 12 பேருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளதால், அவர்களை தங்கள் குடும்பத்துடன் சேர அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்கா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக தாக்கா காவல்துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் மஸ்ருகூர் ரஹ்மான் கூறுகையில், “26 பேரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், 12 பேருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. மீதி 14 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
27 பேரில் ஒருவர் மட்டும், சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமாக தப்பிக்க முயன்றதால், 12 வார சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.