Home நாடு மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 – புக்கிட் கட்டில் : பக்காத்தான் முதலமைச்சர்...

மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 – புக்கிட் கட்டில் : பக்காத்தான் முதலமைச்சர் வேட்பாளர் வெற்றி பெறுவாரா?

547
0
SHARE
Ad
அட்லி சஹாரி

(மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் இரண்டாவதாக நாம் பார்க்கவிருப்பது புக்கிட் கட்டில். பக்காத்தான் ஹாரப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி போட்டியிடும் தொகுதி. அது குறித்து விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

நாடு சுதந்திரம் பெற்றது முதல் மலாக்கா மாநிலத்தில் எப்போதுமே தேசிய முன்னணிதான் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தது. அந்த வரலாற்று தொடர் சாதனையை முதல் முறையாக 2018-இல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முறியடித்தது.

அதைத் தொடர்ந்து மலாக்கா மாநில முதலமைச்சராக பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சார்பில் பதவி ஏற்றார் அட்லி சஹாரி. ஆனால் கடந்த மார்ச் 2020-ஆம் ஆண்டில் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை இழந்தார்  அட்லி சஹாரி.

#TamilSchoolmychoice

இருப்பினும் இன்று வரை மலாக்கா மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்கியவர் என்ற வகையில் அவருக்கான ஆதரவு இன்னும் நிறைய அளவில் இருந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சில மாதங்களுக்கு முன்னால் மீண்டும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் மலாக்கா அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் மீண்டும் கவிழ்ந்தது.

அதிர்ஷ்டக் காற்றும் மீண்டும் அட்லி சஹாரி பக்கம் வீசத் தொடங்கியிருக்கின்றது. நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் அதன் முதலமைச்சராக அட்லி சஹாரிதான் பதவியேற்பார் என பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

அதன் காரணமாக பரபரப்பான நட்சத்திரத் தொகுதிகளுள் ஒன்றாக மாறியிருக்கிறது அட்லி சஹாரி போட்டியிடும் புக்கிட் கட்டில் தொகுதி.  ஹங்துவா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று புக்கிட் கட்டில்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, அமானா கட்சியின் சார்பில் இந்தச் இந்தச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அட்லி சஹாரி  3,159 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அப்போது மும்முனைப் போட்டி இங்கு நிலவியது. அம்னோவும் பாஸ் கட்சியும் தனித்தனியே இங்கு போட்டியிட்டன.

அந்த மும்முனைப் போட்டியில் அட்லி சஹாரி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறை அவர் 4 முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். அவரை எதிர்த்து அம்னோ தேசிய முன்னணி சார்பில் டத்தோ ஹஸ்நூர் ஹுசின் போட்டியிடுகிறார்.

பாஸ் கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக முகமட் அல்-அபிஸ் யாஹ்யா போட்டியிடுகிறார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் இங்கு போட்டியிடுகிறார்.

25,410 வாக்காளர்களைக் கொண்ட தொகுதி புக்கிட் கட்டில். இதில் 64 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். 31 விழுக்காட்டினர் சீன வாக்காளர்கள். 4 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்கள். மற்றவர்கள் ஒரு விழுக்காட்டினர்.

எனவே மலாக்கா மாநிலத்தின் மற்ற சட்டமன்றங்களைப் போலவே புக்கிட் கட்டில் தொகுதியிலும் மும்முனைப் போட்டிகளால் மலாய் வாக்குகள் பிளவுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்று அணிகளாக மலாய் வாக்குகள் பிளவுபடும் என்பதால் 35 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாத சீன, இந்திய வாக்காளர்களே அட்லி சஹாரியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பர். அந்த வகையில் அவர் மீண்டும் அபரிமிதமான பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அடுத்த முதலமைச்சராக அவர் பக்காத்தானால் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவருக்குக் கூடுதல் ஆதரவு இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பக்காத்தான் ஹாராப்பான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் அட்லி சஹாரிதான் முதலமைச்சராவார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

ஆனால், அவர் அந்தப் பதவியை அடைவதற்கு அவருக்கு வெற்றி வாய்ப்பை முதலில் புக்கிட் கட்டில் சட்டமன்றத் தொகுதி பெற்றுத் தருமா?

-இரா.முத்தரசன்