சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்குகள் தொடர்பில் தற்போது தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுகிறார். தலைமறைவாகி விட்ட அவரைத் தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அடுத்த கட்டத் திருப்பமாக அவருக்கு சொந்தமான 6 வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கியுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டார் என ராஜேந்திர பாலாஜி, அவரது தனிச் செயலாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து விருதுநகர் காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி, அவரின் செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டிசம்பர் 17ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அவரின் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே நாளில்தான் விருதுநகரில், திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய பின்னர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டார்.
அன்று முதல் அவர் தேடப்பட்டு வருகிறார். ராஜேந்திர பாலாஜியின் கைப்பேசி தொடர்புகளையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அவரைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 நாட்கள் ஆகியும் அவர் பிடிபடாமல் தப்பித்து வருவதால் அவரின் 6 வங்கி கணக்குகளை காவல் துறையினர் முடக்கியுள்ளனர்.