
(இன்று டிசம்பர் 26, அமரர் இரா.பாலகிருஷ்ணனின் பிறந்த நாள். மலேசிய தமிழ் வானொலித் துறையின் தலைவராக அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு காரணமாக இன்றும் “ரேடியோ பாலா” எனப் பலராலும் நினைவு கூரப்படுபவர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சில சிறப்பான பண்பு நலன்களையும் அவரின் இரசிக்கத்தக்க உணவுப் பழக்க வழக்கங்களையும் நினைவு கூர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
1973-ஆம் ஆண்டில் மஇகாவின் தேசியத் தலைவரான டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம், கொண்டு வந்த மாற்றங்களுள் முக்கியமானது நன்கு படித்த இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சிக்குள் அவர்களை இணைத்தது.
அவ்வாறு அவர் அடையாளம் கண்டவர்களில் முக்கியமானவர் இரா.பாலகிருஷ்ணன். அனைவராலும் பாலா என அன்புடன் அழைக்கப்பட்டவர்.

பாலாவின் நெருக்கமான நட்பு வட்டங்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் – மாணிக்கா பாலாவை மஇகாவின் வழி நேரடி அரசியலில் ஈடுபட அழைத்தார் என்பது! பாலாவின் தமிழ் உணர்வு, சேவை மனப்பான்மை மாணிக்காவையும் ஈர்த்தது.
ஆனால், பாலாவோ மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தையும் அவர் பல சமயங்களில் பின்னாளில் கூறியிருக்கிறார். “எனக்கு அரசியல் ஒத்து வராது. மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பட்டென்று கூறிவிடுவேன். மனிதர்களுக்கு ஏற்றவாறு பேசுவதும், நடந்து கொள்வதும் என்னால் முடியாது” என அவர் விளக்கம் அளித்தார்.
சுப்ரா, பத்மா இருவரையும் இறுதிவரை ஆதரித்த பாலா…
இருந்தாலும், தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த டத்தோ கு.பத்மநாபனையும், (டான்ஶ்ரீ டத்தோ) சி.சுப்பிரமணியத்தையும் அரசியலுக்குப் பொருத்தமான ஆற்றலாளர்கள் என மாணிக்காவிடம் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் பாலா.
பாலாவின் சிபாரிசு ஒரு பக்கம் – தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளின் மூலம் சொந்த ஆற்றலை நிரூபித்தது இன்னொரு பக்கம் – ஆகிய காரணங்களால் மஇகாவில் உயர் பதவிகளை அடைந்தனர் சுப்ராவும், பத்மாவும்! மக்கள் சேவையிலும், அரசியல் பணிகளிலும், அரசாங்கப் பதவிகளிலும் சிறந்த பங்களிப்பை அவர்கள் இருவரும் வழங்கினர்!

பிற்காலத்தில் மாணிக்கா இல்லாத காலத்தில் சுப்ராவும் பத்மாவும் மஇகாவில் அரசியல் போராட்டங்களைச் சந்தித்தபோதும் அவர்களுக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றார் பாலா.
முக்கியமான அரசியல் சந்திப்புகளை சுப்ரா, பத்மாவுக்கு ஏற்பாடு செய்து தன் வீட்டிலேயே அந்த சந்திப்புகளை வைத்துக் கொள்வார் பாலா. எந்த நிலையிலும் அது குறித்து வெளியில் யாரிடமும் பேச மாட்டார்.
நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பாலா, தன் இறுதி மூச்சு வரை எந்த சூழ்நிலையிலும் சுப்ராவையும், பத்மாவையும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார்.
வானொலித் துறையில் கவனம் செலுத்திய பாலா
மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்கப்பட்டபோது அதன் முதல் கட்ட மாணவர்களில் ஒருவராகப் படித்துத் தேறியவர் பாலா. அவருடன் படித்தவர்தான் டத்தோ கு.பத்மநாபன். அவர்களோடு படித்த இன்னொருவர் இராம.சுப்பையா.
தங்களின் இனிய நண்பர் இராம.சுப்பையா கார் விபத்தில் அகால மரணமடைய அவரின் நினைவாக பாலா மற்ற நண்பர்களுடன் இணைந்து தொடங்கியதுதான் “டாக்டர் இராம.சுப்பையா உபகாரச் சம்பள நிதி”. அந்த நிதிவாரியத்தின் முதல் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார் பாலா. அந்த அமைப்பின் வழி நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிதி உதவி பெற்று தங்களின் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை நிறைவு செய்தனர்.
தற்போது அந்த உபகாரச் சம்பள நிதியின் தலைவராக டத்தோ வி.எல்.காந்தன் செயல்பட்டு வருகிறார்.
பல்கலைக் கழகத்தில் பத்மாவுடன் தொடங்கிய பாலாவின் நட்பு, பத்மா மறையும் நாள் வரை சற்றும் நிலைகுலையாமல் தொடர்ந்தது. “எனக்கு முதல் நண்பர். நெருங்கிய நண்பர் என்றால் அது பத்மாதான். அப்புறம்தான் சுப்ரா” என பகிரங்கமாகவே பலமுறை கூறியிருக்கிறார் பாலா.
சுப்ராவின் ஆத்ம நண்பராகத் திகழ்ந்தவர்

சுப்ராவைப் பொறுத்தவரையில் அவரின் ஆத்ம நண்பராகத் திகழ்ந்தவர் பாலா. அடிக்கடி அவர்கள் தனியாகச் சந்தித்து மணிக்கணக்கில் அளவளாவுவார்கள். தனக்கு நேரும் சொந்தப் பிரச்சனைகள், அரசியல் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், மனம் விட்டுப் பேசி பகிர்ந்து கொள்ள சுப்ரா தேடிச் சென்ற ஒரே நபர் பாலாதான்!
சுப்ராவுக்கு பல நண்பர் குழாம்கள் இருந்தன. இருந்தாலும் பாலாவுக்கும், சுப்ராவுக்கும் இடையில் இருந்த நெருக்கமும், நட்பும் அவர்கள் இருவரையும் அறிந்த நண்பர்களுக்கு நன்கு தெரியும்.
பாலாவுக்கும், சுப்ராவுக்கும் இடையில் இருந்த பகிர்வுகள், பரிமாற்றங்கள் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!
அவர்கள் இருவரும் இரசித்து, பகிர்ந்து கொள்ளும் இன்னொரு அம்சம் உணவுகள்!
அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று தன் நண்பர்களுடன் உணவருந்தி மகிழும் பழக்கம் கொண்டவர் பாலா. அவ்வாறு செல்லும்போது சுப்ராவையும் அழைப்பார். நேரம் இருந்தால் சுப்ராவும் தவறாமல் கலந்து கொள்வார்.
அதே போல சுப்ராவும், நண்பர்களுடன் உணவருந்தச் சென்றாலோ, தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் என யாருக்காவது விருந்துபசரிப்பு நடத்தினாலோ மறக்காமல் பாலாவையும் அழைத்துக் கொள்வார்.
சுப்ராவுக்கும், பாலாவுக்கும் இடையிலான பொது நண்பர்கள், தங்களின் இல்லத்திற்கு பாலாவை விருந்துக்கு அழைத்தால் அவர் சுப்ராவையும் அழைத்து வருவார் என்பதும், அதே போல சுப்ராவை அழைத்தால், தவறாமல் பாலாவை உடன் அழைத்து வருவார் என்பதும் அவர்களின் நட்பு வட்டங்களில் எழுதப்படாத விதி!
அத்தகைய விருந்துபசரிப்புகள் பலவற்றில் கலந்து கொண்ட இனிய அனுபவங்கள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன.
சுப்ரா, சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால் அங்கிருந்து அவரின் ஆதரவாளர்கள் சிறந்த டுரியான்களை அவரின் வீட்டுக்கு அனுப்புவார்கள். பாலாவுக்கும் டுரியான் மிகவும் பிடிக்கும். சிகாமாட் டுரியான் வீட்டுக்கு வந்தால் தன்னுடன் இணைந்து அந்த டுரியான்களை சாப்பிட சுப்ரா அழைக்கும் நபர்களில் ஒருவர் பாலா.
இப்படியாக, பல அம்சங்களில் அவர்கள் இருவருக்குமான நட்பு இறுதி வரை தொடர்ந்தது.
மக்கள் ஓசையின் வாரியத் தலைவராகப் பணியாற்றியவர் பாலா
பாலாவின் ஆழ்ந்த தமிழ்ப் பற்று, தமிழ் மொழிக்காக அவர் வழங்கிய பங்களிப்பு பல தருணங்களில் பலரால் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ் நாளிதழ்களுக்காக – அவற்றின் வளர்ச்சிக்காக அவர் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்தார் என்பது பலருக்குத் தெரியாத அவரின் இன்னொரு பண்புநலன்.
நாட்டில் ஒரே தமிழ் நாளிதழ் மட்டும் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நடுநிலையான செய்திகளுக்கு அந்தப் பத்திரிகை இடம் கொடுக்காத காரணத்தால், சுப்ராவும், ஆதி.குமணனும் இணைந்து “தமிழ் ஓசை” என்ற நாளிதழைத் தொடங்க முன்வந்தனர்.
அப்போது சுப்ராவின் நெருங்கிய, வசதி படைத்த நண்பர்கள் சிலர் “தமிழ் ஓசை” தொடங்கப்பட, நிதி உதவிகள்- முதலீடுகள் செய்தனர். அவர்களில் முதன்மையானவர் பாலா. பிற்காலத்தில் அந்த முதலீட்டைத் திரும்பப் பெறும் வாய்ப்பு பாலாவுக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் அதுகுறித்து பாலா எப்போதுமே குறைபட்டுக் கொண்டதில்லை.
சுப்ராவின் மற்ற நண்பர்களும் அவ்வாறே நடந்து கொண்டனர். ஒரு போராட்டக் கணத்தில் – களத்தில் –தங்களால் இயன்ற சிறிய பங்களிப்பு என்றே பாலா உள்ளிட்ட சுப்ராவின் நண்பர்கள் “தமிழ் ஓசைக்கான” நிதி உதவியைக் கருதினர்.
பின்னர் 2005-ஆம் ஆண்டில் ஆதி.குமணனின் மறைவைத் தொடர்ந்து மக்கள் ஓசை நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. அந்தப் பத்திரிகையின் நிர்வாகத் தலைவராக இருந்து தனது பங்களிப்பை வழங்கினார் பாலா. தினமும் மக்கள் ஓசை அலுவலகம் வந்து பத்திரிகையாளர்களை உற்சாகப்படுத்துவதோடு, செய்திகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்குவார்.
மக்கள் ஓசை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு திறந்த வெளி “மீ சூப்” கடையின் “கறி மீ” பாலாவுக்கு பிடித்தமான உணவு. வேலை முடிந்ததும் வழக்கம்போல் தனியாகப் போய் சாப்பிடமாட்டார். மக்கள் ஓசை பணியாளர்கள் சிலரையும் அழைத்துக் கொள்வார். அந்த சமயத்தில் நண்பர்கள் யாராவது அழைத்தால், “இந்தக் கடையில் கறி மீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வந்தால் வாங்கித் தருவேன்” என்பார்.
பாலாவின் நேரந்தவறாத குணம்
நேரக்கட்டுப்பாட்டில் ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தவர் பாலா. “நான் ஒரு கூட்டத்திற்கோ சந்திப்புக்கோ செல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிகழ்ச்சிக்கே போகாமல் இருந்து விடுவேன் என்பதுதான் எனது கட்டுப்பாடு” என அடிக்கடி கூறுவார். மற்றவர்கள் தாமதாக வந்தாலும் திட்டுவார். மற்றவர்களைக் காக்க வைத்து அவர்களின் நேரத்தை வீண்டிக்கக் கூடாது எனக் கண்டிப்பார்.
பாலாவின் குறிப்பிடத்தக்க இன்னொரு குணாதிசயம், மதிய வேளையில் குறைந்தது 2 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு. அதிகாலையில் எழுந்து விடுவார். இருந்தாலும் மதியத் தூக்கம் அவசியம்.
வானொலியில் பணியாற்றிய காலத்திலும் 4 மணிக்கு மேல் பணி முடிந்து வீடு திரும்பி மாலை 6.00 மணி வரை தூங்குவேன் என்பார்.
ஒருமுறை கவிஞர் வைரமுத்துவுடனான மதிய விருந்தின்போது, தான் குறைந்தது 2 மணிநேரம் மதிய தூக்கம் போடும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறினார் பாலா. அதற்கு வைரமுத்து பதிலளித்தார் : “ஒரு மனிதன் 4 மணிநேரம் வேலை செய்யப் போகிறான் என்றால், அதற்கு முன்பாக 2 மணி நேரம் தூங்குவது தப்பில்லை”
இரசித்துச் சாப்பிடும் பாலாவின் உணவுப் பழக்கங்கள்
பாலாவின் நட்பு வட்டங்களில் அவரின் உணவுப் பழக்கங்களும், வழங்கப்படும் உணவை இரசித்து, ருசித்து அனுபவித்துச் சாப்பிடும் அவரின் குணாதிசயமும் பிரசித்தம்.
தலைநகர் லெபோ அம்பாங் கிட்டங்கிகளில் (உணவகங்கள்) சாப்பிடச் செல்கிறார் என்றால், முன்கூட்டியே அந்தக் கிட்டங்கிகளுக்கு அழைத்து, அன்றைக்கு என்ன சிறப்பு சமையல் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். சில சமயங்களில் சில சிறப்பு உணவுகளை அவரே சமைக்கச் சொல்வார். அதற்காக தனிக் கட்டணத்தையும் செலுத்திவிடுவார்.
அவர் இறுதிக் காலத்தில் உடல்நலம் குன்றி பெரும்பாலும் வீட்டிலேயே இருந்த சமயத்தில் நண்பர்கள் யாராவது அவரைச் சந்திக்க வருவார்கள். சந்திக்க வருவதற்கு முன்பாக அவரை அழைப்பார்கள். “நீ எங்கிருந்து வருகிறாய்? வரும் வழியில் (ஒரு குறிப்பிட்ட பிராண்ட்) ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா?” என உரிமையுடன் அன்புக் கட்டளையிடுவார்.
உலக அளவில் பல நாடுகளுக்கு சென்ற அனுபவம் கொண்டவர் என்பதால் ஒவ்வொரு நாட்டு உணவும் அவருக்கு அத்துப்படி! அந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும், எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சுவாரசியமாக விவரிப்பார்.
1936-ஆம் ஆண்டில் தெலுக் ஆன்சன் (இன்றைய தெலுக் இந்தான்) சுங்கை ரூபானா தோட்டத்தில் பிறந்து வளர்ந்த பாலா 25 மே 2009-இல் காலமானார். அவர் மறைந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன.
அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரின் மிகப் பெரிய நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் அவரைப் பற்றிய இனிமையான நினைவுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவரின் பொது நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம் அவர் குறித்த ஏதாவது சம்பவம், அவர் ருசித்துச் சாப்பிட்ட ஏதாவது ஓர் உணவு – அந்தச் சந்திப்பில் நிகழும் உரையாடல்களில் கண்டிப்பாக இடம் பெறும்.
சில சமயங்களில் நாம் உண்ட உணவுகளின் சுவை எத்தனையோ நாட்கள் கடந்தும், நம் நாவினில் மறையாமல் தங்கியிருக்கும்.
அதே போன்று பாலாவுடன் ஒன்றாக அமர்ந்து இரசனையுடன் உணவருந்திய தருணங்களும் ஆண்டுகள் பல கடந்தாலும், இனிமையும், அவரின் பிரிவு தந்த சோகத்தின் கசப்புமாக கலந்து அவரின் நண்பர்களின் நினைவுகளில் எப்போதும் மறையாமல் உறைந்திருக்கும்.