பெட்டாலிங் ஜெயா,ஜன.28- சிலாங்கூர் மாநில அரசாங்கம் பெட்டாலிங் ஜெயா புக்கிட் காசிங் சிவன் ஆலயத்திற்கு 2.6 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லீயூ (படம்) தெரிவித்தார்.
கடந்தாண்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் மானியம் கேட்டு மனு செய்திருந்த 11 ஆலயங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரம் வெள்ளியை மானியமாக வழங்கவிருப்பதாகவும், அதே வேளை இந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான பரப்பளவு கொண்ட நிலம் பெட்டாலிங் ஜெயா ஆலயத்திற்கு வழங்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
முறைப்படி பதிவு பெறாத ஆலயங்களுக்கு மானியம் வழங்க முடியாது என்று தெரிவித்த அவர் முறையான பதிவோடு இயங்கும் ஆலயங்களுக்கு மாநில அரசு மானியம் வழங்க தவறியதில்லை என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசின் மானியங்களை பெற விரும்பும் ஆலய நிர்வாகம் சீன பெருநாளுக்கு முன் பதிந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். அண்மையில் சன் சிட்டி உணவகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது 11 ஆலயத் தலைவர்கள் மானியத்தை பெற்று கொண்டனர்.