Home நாடு போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்த சுகுமாறனின் இறுதி நிமிடங்கள்

போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்த சுகுமாறனின் இறுதி நிமிடங்கள்

878
0
SHARE
Ad

Sugumar-dead-body---Sliderஜனவரி 28 – “குகன் பாகம் 2” – என்று இன்னொரு நாவல் போடும் அளவுக்கு பரபரப்பான சம்பவங்களையும், சந்தேகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது அண்மையில் நிகழ்ந்த சுகுமாறனின் மரணம்.

போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்த இந்திய பாதுகாவலர் சுகுமாறன் மரணமடைவதற்கு முன்னால் நடந்த சம்பவங்களை சாட்சிகளின் மூலம் தொகுத்து மலேசியாகினி இணையப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சம் பின்வருமாறு;-

“ஜனவரி 23ஆம் தேதி மாலை மங்கிய நேரம். சாலையோரத்து புதர்களுக்கு மத்தியில் 40 வயது  சுகுமாறன் பிணமாக கிடந்தார். அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

அவரின் முகத்தின் மீது மஞ்சள் போன்ற ஒரு பொடி தூவப்பட்டிருந்தது.

உடன்பிறந்த நால்வரில் இளையவரான சுகுமாறன், அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர்தான் உலு லங்காட்டிலுள்ள தாமான் ஸ்ரீ நந்திங் என்ற இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பானம் அருந்தியிருக்கின்றார்.

தனது மோட்டார் சைக்கிளை பெர்சியாரான் இந்தான் என்ற இடத்தில் ஒரு பலசரக்கு கடைக்கு வெளியே நிறுத்தியிருக்கின்றார் சுகுமாறன். அப்போது மணி  ஏறத்தாழ 5.15 இருக்கும்.

சுகுமாறன் மனநோயாளியா?

அதன் பின்னர் அந்த கடைக்குள் நுழைந்த சுகுமாறன் பாகாசா மினாங்காபாவ் எனப்படும் நெகிரி செம்பிலான் வட்டார மொழியில் ஏதேதோ  பேசத் தொடங்கியிருக்கின்றார். அவரது வழக்கமான “ஒரு மாதிரியான” போக்கை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த பலசரக்கு கடை நடத்தும் குடும்பத்தினர் சுகுமாறனின் அந்த பேச்சை அப்போது பொருட்படுத்தவே இல்லை.

“அவர் ஒரு மனநோயாளி என்பதை நாங்கள் எல்லாம் அறிந்திருந்தோம். சில சமயங்களில் கொஞ்சம் கிறுக்குத் தனமாக அவர் நடந்து கொண்டாலும், அவர் மற்றவர்களை தொந்தரவு செய்வதில்லை. அவர் சுமுகமாகவே பழகுவார். எங்களிடமும் மரியாதையாக நடந்து கொள்வார்” என்று கூறினார், அந்த பலசரக்கு கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத 18 வயது இளைஞர்.

அந்த பலசரக்கு கடை நடத்தும் 52 வயது நபர் தனது குடும்பத்தினரின் பெயர்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி ஷா ஆலாம் காவல் துறையிலிருந்து ஏறத்தாழ 30 போலீஸ்காரர்கள் சம்பவம் நடந்த வட்டாரத்திற்கு விசாரணைகள் நடத்துவதற்காக வந்திருக்கின்றனர். அதனால் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதைப் பற்றி பேசுவதில் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

தங்களின் கடையிலிருந்து வெளியான சுகுமாறன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானார் என்றும் ஆனால் திடீரென்று மீண்டும் மோட்டார் சைக்கிளிலிந்து இறங்கி தனது தலைக்கவசத்தை (ஹெல்மெட்) ஓங்கி தரையில் அடித்த தாகவும் அந்த பலசரக்கு கடையில் வேலை பார்க்கும் நபர் கூறினார்.

சுகுமாறன் ஆத்திரம் அடைந்திருந்தாரா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்தாரா என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அந்த நபர் கூறினார்.

சுகுமாறனின் இத்தகைய நடவடிக்கை வழக்கமான ஒன்று என்பதால் அதனைப் பொருட்படுத்தாமல் சமையல் எரிவாயு ஒன்றை விநியோகிப்பதற்காக வெளியே சென்ற அந்த கடைக்காரர் திரும்பி வந்து பார்த்தபோது சுமார் 5.30 மணியளவில் சுகுமாரன் சாலைக்கு அப்பால் நின்றிருந்ததைப் பார்த்திருக்கின்றார்.

தனது மோட்டார் சைக்களில் கொஞ்ச தூரம் சென்ற சுகுமாறன் ஒரு தள்ளுவண்டியில் உடைந்த உலோகத்தை திரட்டிக் கொண்டிருந்த ஒரு பர்மிய அந்நிய நாட்டவரை பயமுறுத்தியிருக்கின்றார்.

அதன் பின்னர் அந்த தள்ளுவண்டியிலிருந்த ஒரு சுத்தியலை எடுத்து வந்து அங்கிருந்த STOP என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்பு சின்னத்தை தாக்கியதோடு அருகிலிருந்த கார் ஒன்றையும் தாக்கியிருக்கின்றார்.

இருந்தாலும் இத்தகைய போக்குக்காக கொலை செய்யப்படும் அளவுக்கு மோசமான நபர் சுகுமாறன் அல்ல என்றும் அந்த கடைக்காரர் கூறினார். அவர் நல்ல நபர்தான் என்றும் அந்த கடைக்காரர் கூறினார்.

“என்னை எப்போது பார்த்தாலும் அவர் மரியாதை செலுத்துவார். அவர் வீட்டுக்கு நான் எரிவாயு கொண்டு செல்லும் போதெல்லாம் நான் முஸ்லிம் என்பதால் அவரது வீட்டு நாயைப் பிடித்து என்னிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்வார்” என்றும் அந்த கடைக்காரர் கூறினார்.

போலீஸ்காரர்கள் துரத்தினார்கள்

தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர், ஆஜானுபாகுவான உருவம் கொண்ட சுகுமாறன் தனது மோட்டார் சைக்கிளை அந்த தள்ளுவண்டியில் ஏற்றிக் கொண்டு, அந்த தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு அருகில் 300 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு குடியிருப்பை நோக்கி சென்றிருக்கின்றார்.

இந்த சமயத்தில்தான் சுகுமாறனின் பின்னால் ஒரு போலீஸ் கார் வந்திருக்கின்றது. போலீஸ் காரைப் பார்த்ததும் தள்ளவண்டியை அப்படியே போட்டுவிட்டு அவர் ஓடத் தொடங்க, போலீஸ்காரர்களும் அவரை விரட்டத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அந்த சமயத்தில்தான் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரியவில்லை. சாலையில் ஓடத் தொடங்கிய அவரை நோக்கி மற்றொரு போலீஸ் மோட்டார் சைக்கிளும் விரட்டத் தொடங்கியது.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும் என்ன நடக்கின்றது என்ற ஆர்வத்தில் யாரோ ஒரு குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் துரத்துகின்றது என நினைத்துக் கொண்டு அங்கே கூடத் தொடங்கியிருக்கின்றனர்.
“சுமார் 400 மீட்டர் தள்ளி, ஜாலான் உலு லங்காட் அருகில் ஜாலான் லெஜண்டா சூரியா 1, என்ற இடத்திலுள்ள கடைகளுக்கு அருகில் சுமார் 15 பேர் சாலையைக் கடந்து ஓடிச் சென்று சுகுமாறனைப் பிடித்து அவர் தப்பி ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு குற்றவாளி என நினைத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்” என பன்னீர் செல்வம் என்ற 46 வயது சாட்சி விவரிக்கின்றார்.

சுகுமாரன் கைவிலங்கிடப்பட்டிருந்தார்…

நான் பார்த்தபோது சுகுமாரன் போலீசாரால் கைவிலங்கிடப்பட்டிருந்தார் என்றாலும் கூடியிருந்த கும்பல் அவரைத் தாக்கிக் கொண்டிருந்தது என்றும் பன்னீர் செல்வம் கூறினார். அப்போது மணி மாலை ஏறத்தாழ 6.15 இருக்கும்.

போலீசாரால் பிடிக்கப்பட்ட பின்னரும் ஏன் சுகுமாறன் தாக்கப்பட்டார் என வினவியதற்கு அவர் அப்போது திமிறிக் கொண்டும் தனது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டும் இருந்தார் என பன்னீர் செல்வம் கூறினார்.

இருப்பினும் முன்பு வந்த தகவல்களுக்கு நேர்மாறாக, அந்த இடத்தில் மூன்று போலீஸ்காரர்கள் மட்டும் இருந்த தாகவும், அவர்களில் ஒருவர்தான் பொதுமக்களோடு சேர்ந்து சுகுமாறனைத் தாக்கியதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

“அதன்பின்னர் மற்றொரு போலீஸ் அதிகாரி ஒரு பொடியை சுகுமாறனின் முகத்தில் தேய்த்தார். அது என்ன பொடியென்று தெரியவில்லை. பின்னர்தான் அது மஞ்சள் பொடி என்பதை நான் தெரிந்து கொண்டேன்” என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.

இதைச் செய்தது போலீஸ்தான் என்பதை உறுதியாக கூற முடியுமா என்று கேட்டதற்கு “உறுதியாக கூற முடியும். அந்த போலீஸ் அதிகாரி அந்த பொடி அடங்கிய பொட்டலத்தை வைத்திருந்ததை நான் பார்த்தேன்” என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.

அந்த போலீஸ்காரர் சற்று குள்ளமாகவும், வழுக்கையாகவும், தொந்தி உடையவராகவும் இருந்தார் எனவும் பன்னீர் செல்வம் விளக்கினார்.

இருந்தாலும் ஏன் அந்த இடத்தில் மஞ்சள் பொடி கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கின்றது.

அதன்பின்னர் மூன்றாவது போலீஸ்காரர் ஒருவர் சுகுமாறனின் கழுத்து மீது அழுத்தி மிதித்துக் கொண்ட போதுதான் சுகுமாறன் திமிறுவதை நிறுத்தினார் என்றும் பன்னீர் செல்வம் கூறியிருக்கின்றார்.

–    போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.