ஜனவரி 29 – சந்தேகமான முறையில் மரணமடைந்த சுகுமாறன் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ள பிகேஆர் கட்சியினர் இதற்காக கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் தேதி புத்ரா ஜெயாவிலுள்ள உள்துறை அமைச்சை நோக்கி பிணப்பெட்டியை ஏந்தி ஊர்வலம் நடத்தவிருக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஊசேன் அலுவலகம் நோக்கி ஓர் அடையாள கண்டனமாக இந்த பிணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும் என்று பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் வழக்கறிஞருமான என்.சுரேந்திரன் (படம்) தெரிவித்தார்.
“சுகுமாறனின் குடும்பத்தார் போலீசாரின் இந்த முடிவால் மனம் உடைந்து போயிருக்கின்றனர் என்றாலும் நீதிக்காக அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். அதுவரை சுகுமாறனின் இறுதிச் சடங்குகள் நடைபெறாது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றும் சுரேந்திரன் கூறினார்.
போலிசாரால் பின் தொடரப்பட்ட சுகுமாறன் கைகள் பின்புறம் விலங்கிடப்பட்ட நிலையில், முகத்தில் மஞ்சள் பொடி தூவப்பட்டு உலுலங்காட் தாமான் பெக்காக்கா வட்டாரத்தில் பிணமாகக் கிடக்கக் காணப்பட்டார்.
ஆனால் தவறு ஏதும் நடக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நாளை இரவு 8 மணிக்கு சுகுமாறன் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் காஜாங் போலீஸ் தலைமையகம் முன்னால் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.
இன்று காலை சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி சுரேந்திரன், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு முன்னால் குந்தியிருப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.
இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கும், சுகுமாறனின் மரணத்தை கொலையாக வகைப்படுத்த வேண்டுமென்றும் இந்த குழுவினர் போலீசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக சுகுமாறனின் குடும்பத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞரான லத்திஃபா கோயா தெரிவித்தார்.
போலிசார் பொது உறவு அதிகாரிகள் சிலரை எங்களை சந்திப்பதற்காக அனுப்பினர் என்றும் பிகேஆர் கட்சியின் சட்டப்பிரிவு தலைவரான லத்திஃபா கோயா மேலும் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரதமர் நஜிப்பிற்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை இந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் ஏந்தியிருந்தனர்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நுருல் இசா அன்வார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாணிக்கவாசகம், எம்.மனோகரன், ரோஸ்லி செ மாட் ஆகியோரும், பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், சுவாராம் இயக்கத்தின் இயக்குநர் இ.நளினி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
சுகுமாறனின் தாயார் கே.மணிமேகலையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். மாலை 4.30 மணிவரை ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் குற்றவியல் விசாரணை இலாகாவின் (CID) சட்ட ஆலோசகரை சந்தித்த பின்னர் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் மஜிட் சுகுமாறனின் மரணத்தை கொலையாக வகைப்படுத்த வேண்டும் என சுகுமாறனின் குடும்பத்தார் விடுத்த கோரிக்கையை இன்று நிராகரித்தார்.
சுகுமாறன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்தார் என்ற காரணத்தினால், சுகுமாறனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் தெரிவித்திருந்தார்.