Home உலகம் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ் அதிபராகிறார்

பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ் அதிபராகிறார்

734
0
SHARE
Ad

மணிலா : தந்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக நாட்டை ஆண்டார். அவரின் மனைவியோ ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த காலணிகளோடு அரசாங்கப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தினார்.

ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்த, அக்குயினோ என்ற அரசியல் தலைவரை நாடு கடத்தினார் அந்த சர்வாதிகாரி. பல்லாண்டுகள் வெளிநாட்டில் இருந்த அக்குயினோ வருவது வரட்டும் என நாடு திரும்பினார். ஆனால் பரிதாபமாக விமான நிலையத்திலேயே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னணியில் இருந்தது அந்த சர்வாதிகாரிதான் என்பது உலகத்துக்கே தெரிந்த இரகசியம்.

அந்த சர்வாதிகாரிதான் பெர்டினண்ட் மார்க்கோஸ்.

#TamilSchoolmychoice

தன் அரசியல் எதிரி ஒழிந்தான் என மார்க்கோஸ் நிம்மதியாக இருக்க நினைத்தார். ஆனால் அவருக்கு எதிராக விதி வேறோரு உருவத்தில் விளையாடியது. யாரும் எதிர்பாராத விதமாக, அக்குயினோவின் மனைவி கோரோசோன் அக்குயினோ பிலிப்பைன்ஸ் திரும்பி மார்க்கோசுக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

விளைவு?

மார்க்கோஸ் இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டும் பொறுமை இழந்த மக்கள் இராணுவ பீரங்கிகளின் முன்னால் அணிவகுத்து நின்றனர். பொதுமக்களின் எழுச்சியைத் தாங்க முடியாமல் நாட்டை விட்டே ஓடினர் மார்க்கோசும் அவரின் மனைவியும்! நாடு கடந்த வாழ்க்கை வாழ்ந்து மரணமடைந்தனர்.

ஏறத்தாழ இதே போன்ற காட்சிகள்தான் இன்றைக்கு இலங்கையிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆண்டுகள் பல கழிந்து இன்று மீண்டும் பிலிப்பைன்ஸ் வரலாறு மார்க்கோஸ் நோக்கித் திரும்புகிறது. இந்த முறை வரலாறு திரும்பியிருப்பது அவரின் மகனை நோக்கி!

பிலிப்பைன்சுக்கான அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடியிருப்பதாக அறிவித்திருக்கின்றார் மார்க்கோசின் மகன் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர்.

எனது குடும்பப் பின்னணியை வைத்து என்னை எடை போடாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர். எல்லா பிலிப்பைன்ஸ் மக்களுக்குமான அதிபராக இருப்பேன் என்றும் முழங்கியிருக்கிறார்.

இதுவரையில் எண்ணப்பட்டிருக்கும் 98 விழுக்காட்டு வாக்குகளில் 31 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடப்பு துணை அதிபரான லெனி ரோப்ரிடோ 14 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

மக்கள் தெளிவாக தங்களின் ஆதரவைத் தனக்கு புலப்படுத்தியிருப்பதாகவும் மார்க்கோஸ் அறிவித்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் மக்கள் புதிய தலைமைத்துவத்தின் கீழ் தங்களின் நாடு முன்னேற்றம் காணுமா எனக் காத்திருக்கிறார்கள்!

-இரா.முத்தரசன்