Home உலகம் கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன் தகவல்

கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன் தகவல்

703
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் ஆசியான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான  உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று சென்றிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குழுவில் இடம் பெற்றிருக்கிறார் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நிலவி வரும் கட்டாயத் தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று புதன்கிழமை (மே 11) வாஷிங்டனிலுள்ள அமெரிக்க வணிக, சுங்கத் துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு இலாகாவின் துணை ஆணையர் ஆன்மேரி ஆர்.ஹைசிமித்துடன் (Ann Marie R. Highsmith) சரவணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை துடைத்தொழிக்க அமெரிக்கா மலேசியாவுடன் ஒத்துழைக்கத் தயார் என சரவணன் அறிவித்தார்.

“எங்கள் இருவருக்கும் இடையில் பயன்மிக்க கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க எங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் மகிழ்ச்சியுடன் இணங்கியுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் ஒரு கூட்டு செயற்குழு அமைக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தக் குழுவில் மலேசிய மனித வள அமைச்சு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட மற்ற அரசு இலாகாக்களும், அமெரிக்க சுங்க, எல்லைக் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பார்கள். கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை தோட்டத்துறை, விவசாயம், கட்டுமானம், உற்பத்தித் தொழில்துறைகள் சார்ந்தவர்களிடையே ஏற்படுத்துவோம். இந்தக் கூட்டுக் குழு அடிக்கடி சந்திப்புகள் நடத்தி இந்த கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடும்” எனவும் சரவணன் தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மலேசியாவுக்கு நேரடியாக வருகை தந்து இந்தப் பிரச்சனையை மேலும் அணுக்கமாகக் கண்காணிக்க பரிந்துரைத்துள்ளார்கள் என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தில் தமது அமைச்சு ஒருநாள் நடைபெறும் கலந்துரையாடல் பட்டறை ஒன்றை நடத்தி கட்டாயத் தொழிலாளர் விவகாரம் குறித்த விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் எனவும் சரவணன் கூறினார்.