Home கலை உலகம் ராகா அறிவிப்பாளர்களின் தொலைக்காட்சி அனுபவங்கள்

ராகா அறிவிப்பாளர்களின் தொலைக்காட்சி அனுபவங்கள்

571
0
SHARE
Ad

ராகா வானொலி அறிவிப்பாளர்கள் (அஹிலா, தொகுப்பாளினி, பிக் ஸ்டேஜ் தமிழ் & சுரேஷ், நகைச்சுவைக் கலைஞர், சிரிக்காதீங்க ப்ளீஸ்) ஆகியோர் தாங்கள் அண்மையில் பங்கு கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்:

1. சமீபத்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் இடம்பெற்ற, முக்கியமாக ஒளிப்பதிவுக் கருவியின் முன் தோன்றிய உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?

அஹிலா – ராகா அறிவிப்பாளர்

அஹிலா: அது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியானத் தருணம் என்றுதான் கூறுவேன். ‘பிக் ஸ்டேஜ் தமிழ்’ எனும் இவ்வளவுப் பிரமாண்டமானத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒளிப்பதிவுக் கருவியின் முன் தோன்றியது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தை நான் மிஸ் செய்கிறேன்.

#TamilSchoolmychoice

சுரேஷ்: நான் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளேன். 2012-இல் தொகுப்பாளராக நான் அறிமுகமான முதல் நிகழ்ச்சி ‘விழுதுகள்’. ஆரம்பத்தில், நான் பதட்டமாக உணர்ந்தேன். ஆனால், சில அனுபவங்களைப் பெற்றப் பிறகு நான் ஒவ்வொருத் தருணங்களையும் இரசித்தேன். ‘பாபா’ஸ் சமையல் நிகழ்ச்சி’, ‘உலகம் விருதுகள்’ என சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நான் தொகுத்து வழங்கியுள்ளேன். ‘சிரிக்காதீங்க ப்ளீஸ்’ எனும் ஆஸ்ட்ரோவின் முதல் உள்ளூர் தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில் நகைச்சுவைக் கலைஞராக இடம்பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

2. வானொலியில் இருந்து தொலைக்காட்சியில் இடம்பெற்றது எளிதான மாற்றமாக இருந்ததா?

அஹிலா: நான் அதிக சிரமத்தை எதிர்நோக்கவில்லை. இருப்பினும், படப்பிடிப்பின் தேவைக்கேற்ப என்னைத் தயார்படுத்திக் கொள்ள ஏறக்குறைய இரண்டு நாட்களுக்கு நான் சிரமத்தை எதிர்நோக்கினேன். அதன் பிறகு எல்லாம் சுமூகமாக நடந்தது. இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் இணைத் தொகுப்பாளர் ஆகியோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் எனது படைப்பை வழங்குவதை உறுதிச் செய்ய அவர்களுடன் ஒத்துப்போவது அவசியமானதாக இருந்தது.

சுரேஷ் – ராகா அறிவிப்பாளர்

சுரேஷ்: என்னைப் பொறுத்தவரை, வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் தேவையானத் தயாரிப்புக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால் அதிக வித்தியாசம் இல்லை. ஒப்பனை மற்றும் நேரம் ஆகியவைத் தொலைக்காட்சியில் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு கூடுதல் கூறுகளாகும்.

3. வானொலி அறிவிப்பாளராக ஒப்பிடுகையில், நீங்கள் தழுவ வேண்டிய சில முக்கிய வேறுபாடுகள் யாவை?

அஹிலா: நான் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருக்கும்போது, மின்னியல் உள்ளடக்கத்தில் இடம்பெற வேண்டியத் தேவை நேர்ந்தால், அழகாகத் தோற்றமளிப்பதை உறுதிச் செய்வது முக்கியமாகும். இருப்பினும், இது மிக முக்கியமான விஷயம் அல்ல. நமது ஒட்டுமொத்தத் தோற்றம், ஒப்பனை, ஆடை அணிகலன்கள், நாம் நம்மை வெளிக்காட்டும் விதம், முகப் பாவனை ஆகிய அனைத்தும் தொலைக்காட்சிப் படைப்பில் கூர்ந்து கவனிக்கப்படும்.

எனவே, நான் மேடையில் இருக்கும்போது, எல்லாமே சரியாக இருப்பதை உறுதிச் செய்வது முக்கியம். நான் வானொலி அறிவிப்பாளராக இருக்கும்போது, உள்ளடக்கப் படைப்பில் மட்டுமே முழுக் கவனம் செலுத்துவேன். இருப்பினும், ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராக, நான் சிறிய விவரங்களுக்குக் கூடக் கவனம் செலுத்த வேண்டும். ஒளிப்பதிவுக் கருவியுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதை உறுதிச் செய்வதும் ஒரு பெரிய வித்தியாசமாகும்.

சுரேஷ்: அழைப்பு நேரம், படப்பிடிப்பு அட்டவணை, தேவைப்பட்டால் மறு படப்பிடிப்பு மற்றும் விளம்பரப் படப்பிடிப்பு ஆகியவை நான் தொலைக்காட்சிக்காகத் தழுவ வேண்டிய முக்கிய வேறுபாடுகளாகும். மற்றவை வானொலியைப் போலவே சமமானவை.

4. வானொலியுடன் ஒப்பிடுகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக உங்களைத் தயார்படுத்த நீங்கள் பயன்படுத்தியச் சில யுக்திகள் யாவை?

அஹிலா: வானொலி உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, எனக்கு ஸ்கிரிப்ட் தேவையில்லை. உள்ளடக்கத்தின் சாராம்சத்தைத் தெரிந்துக் கொண்டபின் என்னால் சரளமாகப் பேச முடியும். இருப்பினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முக்கிய விவரங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிச்செய்ய ஸ்கிரிப்டைப் பின்பற்ற வேண்டும். படப்பிடிப்பின் போது நான் ஸ்கிரிப்டைப் பின்பற்றவில்லை என்றால், மறு படப்பிடிப்புத் தேவைப்படலாம். எனவே, படப்பிடிப்புச் சுமூகமாக நடப்பதை உறுதிச்செய்ய, எல்லாப் படப்பிடிப்பிற்கும் முந்தைய நாள், நான் எப்போதும் ஸ்கிரிப்டை முழுமையாகப் படிப்பேன், அதனை உள்வாங்கிக் கொள்வேன். எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பாக ஒப்பனை செய்யும் போது நான் ஸ்கிரிப்டை நன்கு படித்துத் தெரிந்துக் கொள்வேன்.

சுரேஷ்: தினசரிப் படைப்புகளைப் பற்றிக் கலந்துரையாட வானொலி தயாரிப்பாளர் இருப்பார். அதேபோன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர்(கள்), இயக்குநர்(கள்) மற்றும் தயாரிப்பாளர்(கள்) ஆகியோர் இருப்பார்கள். அவர்கள் முன்னரே ஸ்கிரிப்டைத் தயார் செய்வார்கள். ஸ்கிரிப்டை எப்போதும் என்னுடன் எழுத்தாளர் விளக்குவார். இருப்பினும், இந்தச் செயல்முறைகள் ஸ்டாண்ட்-அப் காமெடிக்குச் சற்று வேறுபடுகின்றன. ஏனெனில், சுவாரசியமாக இருப்பதை உறுதிச்செய்ய நான் நகைச்சுவைகளைச் சுயமாக எழுத வேண்டும்.

5. கலைத்துறையில் கால் பதித்துப் புதிய அனுபவங்களைத் தேடுபவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

அஹிலா: வாய்ப்புகள் உடனடியாகக் கதவைத் தட்டாது, அதற்கு காலத் தாமதம் ஏற்படும் என்பது எனது உண்மையான ஆலோசனை. கலைத்துறையில் அங்கீகரிக்கப்பட ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டும். வாய்ப்புகளைக் கைப்பற்ற அனைவருடனும் நல்ல உறவைப் பேணுவதோடுச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதை உறுதிச்செய்ய வேண்டும். ஆரம்பத்தில், எந்த வாய்ப்பையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்த வாய்ப்பும் சிறியதல்ல. உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். மிக முக்கியமாக, ஒவ்வொரு வேலையிலும் சிறந்து விளங்குங்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் நம்பகமானத் திறமைசாலி என்று நீங்கள் நற்பெயரை உருவாக்க வேண்டும். புகழின் பின்னால் ஓட வேண்டாம். கடினமாக உழைத்தால் புகழ் உங்களைத் தொடரும்.

சுரேஷ்: முதலில், நீங்கள் விரும்பிய வேலைக்காக உங்களைப் பயிற்றுவித்து, நேர்முகத் தேர்வுகளில் கலந்துக் கொள்ளுங்கள். உங்களின் தனித்துவத்தை எப்போதும் வெளிப்படுத்துங்கள்.