Home கலை உலகம் ஆஸ்ட்ரோ தகவல் தொடர்பு அதிகாரி திவியா மாணிக்கம் முதுகலைப் பட்டம் பெற்றார்

ஆஸ்ட்ரோ தகவல் தொடர்பு அதிகாரி திவியா மாணிக்கம் முதுகலைப் பட்டம் பெற்றார்

560
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவின் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்

கடந்தச் சனிக்கிழமை 26 நவம்பர் 2022 புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு.பி.எம்) நடைப்பெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் 3.881 மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப் பட்டம் (Master of Corporate Communication) பெற்றார்.

திவியா மாணிக்கம் கூறுகையில், “சிலாங்கூர் சுல்தான் மற்றும் யு.பி.எம்மின் வேந்தரான (Chancellor) சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜீஸ் ஷாவால் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதை எண்ணி நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், ஒரு பாக்கியமாகவும் கருதுகிறேன். மகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான இத்தருணத்தை என் வாழ்வில் நான் என்றும் போற்றுவேன். இவ்வேளையில் இப்பட்டப்படிப்பை இரண்டே வருடத்தில் செவ்வென முடிக்க உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முதலாளிகள், சகப் பணியாளர்கள் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் நூருல் ஐன் பின்ட் முகமது ஹசான் உட்ப்பட விரிவுரையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கல்விக் கற்றுக் கொடுத்து என்னைச் செதுக்கிய ஆசான்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இவ்வேளையில் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.

போர்ட்டிக்சன் இராணுவ முகாம் தமிழ் பள்ளியில் (SJKT Kem Askar Melayu) ஆரம்பக்கல்வியும் போர்ட்டிக்சன் உயர்நிலைப் பள்ளியில் (STPM) ஆறாம் படிவம் வரையும் திவியா மாணிக்கம் கல்விக் கற்றார். நெகிரி செம்பிலான் இந்தியப் பட்டதாரிகள் கழகத்தில் (PSINS) படிவம் ஆறுக்கானக் கூடுதல் வகுப்புகளிலும் பங்குப் பெற்றும் கல்விக் கற்றார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வில் 3.83 மதிப்பெண்களைப் பெற்ற அவர் போர்ட்டிக்சன் மாவட்டத்திலேயே சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புத்ரா பல்கலைக்கழகத்தில் தொடர்புத் துறையில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். முதலாம் ஆண்டிலேயே தன் தந்தையை இழந்த அவர் JPA என்னும் அரசாங்கப் பொதுச் சேவை இலாகாவின் உதவித்தொகையைக் கொண்டு தனது இளங்கலைப் பட்டப்படிப்பை 3.699 மதிப்பெண்களுடன் வெற்றிக்கரமாக முடித்தார்.

பல தேசிய, அனைத்துலகப் போட்டிகளில் தனது விரிவுரையாளர் பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி சுப்ரமணியத்துடன் பங்குப்பெற்றுப் பல தங்கப் பதக்கங்களை வென்றுப் பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்தார்.

தனது இந்த வெற்றியைக் காலஞ்சென்ற தன் தந்தை மற்றும் குடும்பத்தினருக்குச் சமர்ப்பணம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், புத்ரா பல்கலைக்கழகத்தில் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் முனைவர் பட்டப்படிப்பைத் (PhD, Corporate Communication) தொடர்வதாகக் கூறினார்.

ஆஸ்ட்ரோ மலேசியத் தகவல் தொடர்புப் பிரிவில் திவியா மாணிக்கம் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திவியா மாணிக்கம் பட்டம் பெற்ற நிகழ்ச்சி தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்.