மும்பை, ஏப்ரல் 24- பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
இதில் உலக திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் 66-வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவின் 9 நடுவர்களில் ஒருவராக ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘பரினீதா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றுள்ள பாலிவுட் நடிகை வித்யாபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். குறும்படங்களுக்கான பிரிவின் நடுவராக நடிகை நந்திதா தாஸ் இடம் பெறுகிறார்.
இந்த திரைப்பட விழாவில் மொத்தம் 19 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தேர்வாகும் ஒரு படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்படும். இவ்விழாவில், அமிதாப்பச்சன் முதல்முறையாக நடித்த ஹாலிவுட் படமான ‘தி கிரேட் கேட்ஸ்பி’ என்ற படம் முதலில் திரையிடப்படுகிறது.
இவ்விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். ஆனால், இந்த முறை கைக்குழந்தையுடன் இருக்கும் அவர், இந்த விழாவில் கலந்து கொள்வாரா? என்ற ஐயம் எழுந்துள்ளது.