வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சவார் பகுதியில் ராணா பிளாசா என்ற பெயரில் 8 மாடி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது நேற்று கண்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து இந்த கட்டிடத்திற்குள் மக்கள் யாரையும் அனுமதிக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை கட்டிட உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த கட்டிடம் பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த விபத்து நேர்ந்த போது கட்டிடத்தின் உள்ளே இருந்த மக்கள் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 82 பேர் உயிரிழந்திருப்பதும், சுமார் 500 பேர் படுகாயம் அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.