ஷா ஆலம், ஏப்ரல் 24 – நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் இந்து சமுதாயத்தை இழிவு படுத்திப் பேசிய சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதி வேட்பாளராக அறிவித்த தேசிய முன்னணியையும், அது பற்றி கேள்வி கேட்க தைரியமில்லாத ம.இ.காவின் செயலையும் வன்மையாகக் கண்டிக்கும் வகையில், தனது ஷா ஆலம் கிளை பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக ம.இ.கா கட்சியின் ஷா ஆலம் தொகுதி துணைத்தலைவரான கிளாசிக் சுப்பையா நேற்று அறிவித்தார்.
நேற்று ஷா ஆலம் தொகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பையா இது பற்றி கூறுகையில், “ இனவாதத்தை தூண்டும் சுல்கிப்ளி போன்றவர்களை ஆதரிக்கும் தேசிய முன்னணியின் மறைமுகப் போக்கு கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் அரசியல் சுயநல நோக்கில் தேசிய முன்னணியின் செயல்களை எதிர்க்க தைரியம் இல்லாமல் மௌனம் காத்து வரும் உணர்ச்சியற்ற ம.இ.கா வுடன் இனியும் நான் இருக்கப் போவதில்லை.எனவே வரும் பொதுத்தேர்தலில் ஷா ஆலம் தொகுதியில் வாழும் தன்மானமுள்ள இந்தியர்கள் யாரும் சுல்கிப்ளிக்கு வாக்களிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்து ஆலயங்களை நிறுவக்கூடாது என்று கூறி மாட்டுத்தலையுடன் ஊர்வலம் வந்த இனவாதிகளுக்கு தூண்டுகோலாக செயல்பட்ட பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கும் வேட்பாளர் தகுதி வழங்கியிருக்கும் தேசிய முன்னணியின் செயலை தன்னால் தாங்கிக்கொள்ளவில்லை என்று கூறிய சுப்பையா, இந்திய சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதாகக் கூறும் நஜிப்பின் இது போன்ற இரட்டை போக்கின் காரணமாக தான் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார்.
தனது கிளை உறுப்பினர்கள் 104 பேருடன் கட்சியிலிருந்து வெளியேறிய சுப்பையா, இனி ஷா ஆலம் தொகுதி மக்களிடம் பொதுத்தேர்தலில் சுல்கிப்ளிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஷா ஆலம் தொகுதியிலுள்ள ம.இ.கா வின் கிளைத்தலைவராக இருந்து வந்த சுப்பையா, 2009 ஆம் ஆண்டு துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இந்நிலையில் சுப்பையாவின் இந்த முடிவு ஷா ஆலம் தொகுதி தேசிய முன்னணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்கிப்ளிக்கு எதிராக ஷா ஆலம் தமிழர் சங்கம்
சுல்கிப்ளிக்கு எதிராக ஷா ஆலம் தொகுதி தமிழர் சங்கமும் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அதன் தலைவர் மு.சீரியநாதன் தெரிவித்தார். மேலும் ஷா ஆலம் தொகுதி மக்கள் தன்மானம் கொண்டவர்கள், நிச்சயம் சுல்கிப்ளி போன்ற இனவெறியர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியர்களுக்காக தேசிய முன்னணியை கண்டிக்கும் கிளாசிக் சுப்பையா – நஜிப்புக்காக சுல்கிப்ளியை ஆதரிக்கும் கே.எஸ் சுப்பையா
சுல்கிப்ளி வேண்டாம் என்று தான் ஆரம்பத்திலிருந்தே தேசிய முன்னணியிடம் கூறிவந்ததாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து இறுதியில் சுல்கிப்ளி ஷா ஆலம் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். எனவே பிரதமர் நஜிப்புக்காக இனி சுல்கிப்ளிக்கு ஆதரவு தருவோம் என்று ஷா ஆலம் தொகுதி ம.இ.கா தலைவர் கே.எஸ் சுப்பையா கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியர்களுக்கென ஒரு மண்டபமும், உள்ளூர் கோயில் ஒன்றுக்குமாக 1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் கூறியதாகவும், இதனால் தாங்கள் சுல்கிப்ளியைப் பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றும் தங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் நேரடி தொடர்புள்ளதாகவும் சுப்பையா கூறியிருக்கிறார்.
எனவே, ஷா ஆலாம் ம.இ.கா இரண்டு சுப்பையாக்களால் தற்போது இரண்டு பட்டுக் கிடக்கின்றது. இதில் எந்த சுப்பையாவின் கருத்தும் செயலும் இந்திய வாக்காளர்களை திசை திருப்பப் போகின்றது என்பது போகப் போகத் தெரியும்.