சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவுகள் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு அவர் பொதுச் செயலாளராக தேர்வு பெற்றது சட்டப்படி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
தீர்ப்பு வந்தபின்னர் இல்லத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக நேராக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பதும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்பதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்பதும் உறுதியானது.
தீர்ப்பு வந்ததும் எடப்பாடியார் இல்லத்தில் கூடியிருந்தவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தீர்ப்பு வந்த உடனே எடப்பாடி பழனிசாமி நேராக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு விரைந்தார். அதிமுக தலைமையத்தில் காத்திருந்த அதிமுகவில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் , எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்தததற்காக சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.