சென்னை, ஏப்ரல் 24-எனது ஊர் சுற்றிபுராணம் படபிடிப்பில் நடிகை அஞ்சலி கலந்து கொள்ளாவிட்டால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று இயக்குனர் களஞ்சியம் கூறியுள்ளார்.
‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அஞ்சலி. ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட சில படங்களால் சற்று உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை இயக்குனர் களஞ்சியமும், தனது சித்தியும் கூட்டு சேர்ந்துகொண்டு துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டியதோடு திடீரென மாயமானார். நடிகை அஞ்சலியின் குற்றச் சாட்டுகளை இயக்குனர் களஞ்சியமும், அஞ்சலியின் சித்தியும் மறுத்தனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாயமான அஞ்சலில் கடந்த 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் தனது நிலையை சென்னை காவல்துறை கமிஷனரிடமும் விளக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது, புனேயில் நடக்கும்போல் பச்சன் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்து வந்த ஊர் சுற்றிபுராணம் தமிழ் படத்தில் கலந்துகொள்ள நேற்று முதல் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் அஞ்சலி இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து இயக்குனர் களஞ்சியம் கூறும்போது, “ஊர் சுற்றிபுராணம் படத்தின் படப்பிடிப்பை நடத்த, எல்லா ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறேன். அஞ்சலி வருவார் என, நான் எதிர்பார்த்தேன். ஆனால், சென்னைக்கு அவர் வரவில்லை. படப்பிடிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என, அஞ்சலிக்கு தகவல் தெரிவிக்க, மொபைல் போன் தொடர்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அஞ்சலி ஒப்புக்கொண்டபடி, எனது படத்தில் நடித்து தராவிட்டால், நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன்.” என்று கூறியுள்ளார்.