Home இந்தியா ஸ்டாலின் – ஆளுநர் ரவி சந்திப்பு

ஸ்டாலின் – ஆளுநர் ரவி சந்திப்பு

515
0
SHARE
Ad

சென்னை : நீண்டகாலமாக எதிரும் புதிருமான மோதலில் ஈடுபட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 30) ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடத்தினர்.

தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களைக் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என தமிழ் நாடு அரசாங்கம் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆளுநர் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியது.

இதனைத் தொடர்ந்தே, ஆளுநர் இன்று ஸ்டாலினை அழைத்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இதன் தொடர்பில் ஆளுநர் மாளிகை விடுத்த அறிக்கை பின்வருமாறு தெரிவித்தது:

#TamilSchoolmychoice

“ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களை ஆளுநர் மாளிகை, சென்னையில் இன்று (30.12.2023) மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு. தங்கம் தென்னரசு , திரு. எஸ். ரகுபதி, திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநில தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. தமிழ்நாடு ஆளுநர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். ஆளுநர், மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்”.