கோலாலம்பூர், ஏப்ரல் 26- இஸ்லாம் மதத்தைத் தவிர வேறு யாரும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஆதரித்துள்ளார்.
அதற்கு அவர் கூறும் காரணம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உருவாவதை தடுக்கும் நோக்கத்தில் தான் அரசாங்கம் அம்முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு இஸ்லாம் மதத்தினர் கூறும் கருத்து, கிறிஸ்தவர்களின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது என்று கூறிய நஜிப், இரு பிரிவினரும் வேண்டாத கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அனைத்துலக செய்தி தொலைக்காட்சியான ‘அல் ஜாஸிரா’ வில் அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில், ‘இறைவன்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக மலாக்காரர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி, கடந்த 2007 ஆம் ஆண்டு அச்சொல்லைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றம் அந்த தடையை விலக்கி தீர்ப்பளித்தது. இருப்பினும் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் தற்சமயம் மீண்டும் அச்சொல்லைப் பயன்படுத்துவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நஜிப் பேசியுள்ள இந்த 30 நிமிட நேர்காணல் நிகழ்ச்சி நாளை பிற்பகல் மணி 12.30க்கு ஒளிபரப்பாகவுள்ளது. அத்துடன் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மூன்று முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அல் ஜாஸிரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.