சென்னை,ஏப்ரல்.26– கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை இன்று அதிகாலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா ஓங்கல், பிரகாசம் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்.இவர் மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு நவம்பரில் புகார் மனு அளித்தார்.அதில், “அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் பாபா டிரேடிங் கம்பெனியை நடத்தி வருகிறார்.இவர் தனக்கு ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, 50 லட்சத்தை கமிஷனாக பெற்றுக் கொண்டார்.ஆனால், கடனையும் வாங்கி தராமல், கமிஷனையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வந்தார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதில், பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களது கூட்டாளிகளான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் இதே போன்று பல நபர்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் ஆற்காடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இதையடுத்து சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடந்த ஆண்டும் புகார் வந்தது. அதன் பேரில் நடந்த விசாரணையில் உண்மை தெரிய வரவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் மீது சென்னை மாநகர காவல் துறையில் மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஒவ்வொருவரிடமும் 50 லட்சம் முதல் 5 கோடி வரை பெற்று தருவதாக மோசடி செய்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும், பவர் ஸ்டாருக்கு உதவியாக அவர்களது புரோக்கர்கள் இருவர் செயல்பட்டு வந்து உள்ளனர்.