தாப்பா, ஏப்ரல் 26 – தாப்பா தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார், அங்கு நடப்பு வேட்பாளர் சரவணனை வெல்ல முடியும் என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
வசந்தகுமார், ஹிண்ட்ராப் 2007ஆம் ஆண்டில் நடத்திய மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு சிறை சென்ற ஐந்து தலைவர்களில் ஒருவராவார்.
தான் தாப்பா தொகுதியைப்பற்றி நன்கு ஆராய்ந்து வைத்திருப்பதாகவும், வாய்ப்பளித்தால் மக்களின் அனைத்துத் தேவைகளையும் தேர்தல் கொள்கை அறிக்கையில் கண்டுள்ளபடி நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தாப்பா தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள பூர்வ குடியினரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாப்பா நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் செண்டிரியாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பாக ஒரு பூர்வ குடி வம்சாவளியைச் சேர்ந்தவர் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரவணன் பொதுவிவாதத்திற்கு தயாரா?-வசந்தகுமார் சவால்
“இதுவரை தாப்பா மக்களுக்கு என்ன செய்துள்ளார் சரவணன்? இன்னொரு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க அவர் தகுதியானவர் தானா என்பதைத் தெரிந்துகொள்ள அவரை ஒரு பொதுவிவாதத்திற்கு அழைக்கின்றேன். அவர் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கை குறித்தும், நான் மக்கள் கூட்டணி கொள்கை அறிக்கை குறித்தும் விவாதிப்போம்” என்றும் வசந்தகுமார் சவால் விடுத்துள்ளார்
ஆனால் அந்த அழைப்பை ஏற்காத சரவணன், அவர்களின் கடைசி அஸ்திரம் அது என்றும், அதற்கெல்லாம் தமக்கு நேரமில்லை என்றும் வேண்டுமானால் அங்குள்ள மாடுகளிடம் விவாதம் நடத்துங்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.
“நான் ஒரு கட்சியின் உதவித் தலைவர். என்னுடன் விவாதம் புரிய வசந்தகுமார் யார்? அந்த தகுதி அவருக்கு இல்லை. என்னோடு விவாதம் புரிவதன் மூலம் அவர் பிரபலமாகப் பார்க்கின்றார்” என்றும் சரவணன் வசந்தகுமாரை சாடியுள்ளார்.