சுவிட்சர்லாந்து, ஏப்ரல் 27 – சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ்(Luc Thevenoz) கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வரி ஏய்ப்புக்கு எதிராகப் பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இனி வங்கிகள் ரகசியத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியம்.
தற்பொழுது காலச்சூழ்நிலை மாறிவிட்டதால் வங்கிகள் தாமாகவே தமது வாடிக்கையாளர் பெயர் மற்றும் வங்கியின் இருப்பு பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இருபது நாடுகள் ஒரு குழுவாக இணைந்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வங்கியிருப்பு குறித்து பரிமாறிக் கொள்ள கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் தெவனோஸ் இனி சுவிட்சர்லாந்தால் வங்கி ரகசியத்தைப் பாதுகாக்க இயலாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.