Home நாடு எரா எஃப் எம் வானொலி: ஒரே நாளில் கொந்தளித்து எழுந்த இந்திய சமூகம்!

எரா எஃப் எம் வானொலி: ஒரே நாளில் கொந்தளித்து எழுந்த இந்திய சமூகம்!

83
0
SHARE
Ad
சர்ச்சைக்குள்ளான எரா எஃப்எம் 3 அறிவிப்பாளர்கள்

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களின் தாக்கமும் விரிவும் எந்த அளவுக்கு – எவ்வளவு விரைவாக – மக்களைச் சென்றடைய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நாடு தழுவிய அளவில் அரங்கேறிய காட்சிகள்!

ஆஸ்ட்ரோ குழுமத்தைச் சேர்ந்த எரா எஃப்.எம் வானொலியின் அறிவிப்பாளர்கள் விளையாட்டாக, இந்துக்கள் காவடி எடுக்கும் பாணியைக் கிண்டல் செய்து, தங்களின் வலைத் தளத்தில் அந்தக் காட்சிகளைக் காணொலியாகப் பதிவேற்றம் செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சமூக ஊடகங்களில் அந்தக் காணொலிக் காட்சிகள் பரவத் தொடங்கின. இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்புகளும் ஒருசேர நாடு தழுவிய அளவில் கண்டனங்களைக் குவித்தனர். காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்டர்களும் கூட – மற்ற மதங்களை, இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – தயங்காது முன்வந்து இதுபோன்ற மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல்களைக் கண்டித்தனர்.

நேற்று மாலையில் மஇகாவின் இளைஞர் பகுதியினரும் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றைச் செய்து சம்பந்தப்பட்ட அந்த மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உடகவியலாளர்கள் மூலம் வலியுறுத்தினர்.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழக்கம்போல் உடனடியாக தனது கண்டனத்தைத் தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அதற்கான வழிமுறைகளை மஇகா ஆராயும் என்றார் சரவணன்.

ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், துணையமைச்சர் குலசேகரன் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஒற்றுமைத் துறை அமைச்சர் ஆரோன் டாகாங், துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியாரும் வானொலி அறிவிப்பாளர்களின் செய்கைகளுக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் எழுந்த அதிர்வலைகள் உணரப்பட்ட அதே தருணத்தில் சம்பந்தப்பட்ட 3 வானொலி அறிவிப்பாளர்களும் பகிரங்கமாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டக் காணொலி மூலம் தங்களின் மன்னிப்பைக் கோரினர்.

ஆஸ்ட்ரோ நிறுவனமும் அந்த மூவரும் தங்களின் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீதான விசாரணைகளைத் தொடக்கியுள்ளதாவும் தெரிவித்தனர்.

அந்த மூவரும் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது – அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அப்போதுதான் மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் – என்றார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந.சிவகுமார்.

காவல்துறையில் புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) ரசாருடின் ஹூசேன்.

உடனடியான விசாரணைகளைத் தாங்கள் தொடங்கியுள்ளதாக எம்சிஎம்சி என்னும் மலேசிய தகவல் தொடர்பு பல்ஊடக ஆணையம் அறிவித்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் மத நல்லிணக்கத்தோடு விளையாடாதீர்கள், அதற்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என முழங்கினார் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

தொடர்ந்து ஒரே நாளில் சமூக ஊடகங்களில் இந்துக்கள் – இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் காணொலிகள் – அறிக்கைகள் மூலம் ஒன்றுபட்டு இத்தகைய மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலுக்குக் கடுமையான பதிலடியைக் கொடுக்கத் தொடங்கினர்.

இதில் நாம் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் இத்தனை சலசலப்புகளும் – நகர்வுகளும் – நாடு தழுவிய அளவில் ஒரே நாளில் நடந்து முடிந்திருப்பதுதான்!

அத்தனையும் நடந்தேறியது சமூக ஊடகங்களின் வழி! இணைய ஊடகங்களின் வழி!

அதுதான் மாறிவரும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களின் வளர்ச்சிக்கான அறிகுறி!

-இரா.முத்தரசன்