Home நாடு இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!

இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!

140
0
SHARE
Ad
இஸ்மாயில் சாப்ரி

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு என 2 நாட்களுக்கான மருத்துவ விடுப்பு சான்றிதழை வழங்கியிருப்பதால், அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் தன் வாக்குமூலத்தை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்கள் உள்ளிட்ட பதிமூன்று வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இஸ்மாயில் சாப்ரி பிரதமராக தலைமை வகித்த அரசாங்கத்தின் “மலேசியா குடும்பம்” விளம்பரப் பிரச்சாரத்திற்கான செலவினம் குறித்த ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேக நபராக உள்ளார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

புதனன்று மீண்டும் பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரியை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாகவும், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பாதுகாப்பு இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட RM177 மில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கம் குறித்து அவர் விசாரிக்கப்படுவார் என்றும் அவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.

“இஸ்மாயில் சாப்ரி இந்த வழக்கில் சந்தேக நபராக உள்ளார். ஏனெனில் ஊழல் தடுப்பு ஆணையம் சட்டத்தின் 36-ஆம் பிரிவின் கீழ் அவருக்கு எதிராக அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது, மேலும் கண்டுபிடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடைய நபர்களில் அவரும் ஒருவர்,” என்று அசாம் பாக்கி புத்ரஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையம் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 3) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பிரிவு 36, விசாரணையில் உள்ள நபர் தனது சொத்துக்களை அறிவிக்க ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.

இருப்பினும், இஸ்மாயில் சாப்ரியிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவரின் உடல்நிலையைப் பொறுத்து இருக்கும் என்று அசாம் கூறினார்.

அசாமின் கூற்றுப்படி, இதுவரை 31 நபர்களிடம் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் பல அரசியல்வாதிகளும் அடங்குவர். ஆனால் அவர்களின் அடையாளங்களை அசாம் விவரிக்கவில்லை.

ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்களுக்கு சொந்தமான கணக்குகள் உட்பட மொத்தம் சுமார் RM2 மில்லியன் கொண்ட 13 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் இஸ்மாயில் சாப்ரியின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மேலும் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முதலில் விளக்கும்படி இஸ்மாயில் சாப்ரியிடம் கேட்க விரும்புவதாக அசாம் தெரிவித்தார்.

பாதுகாப்பு இல்லமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு

விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட சொத்துகள் குறித்து மேலும் விவரங்களை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் வழங்கினார்.

கடந்த வாரம் விசாரணையாளர்கள் பல இடங்களில் சோதனை நடத்தினாலும், அனைத்து பணமும் 16 கிலோ தங்கக் கட்டிகளும் பாதுகாப்பு இல்லமாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கைப்பற்றப்பட்டன.

நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் அதன் மதிப்பை நிர்ணயிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு இல்லம் யாருக்கு சொந்தம் என்று கேட்கப்பட்டபோது, அது வாடகைக்கு எடுக்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நிர்வகித்ததாக ஊழல் தடுப்பு ஆணையம் நம்புவதாக அசாம் பதிலளித்தார்.

பணத்தில் RM14 மில்லியன் மட்டுமே ரிங்கிட்டில் உள்ளது. மீதமுள்ளவை அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், சிங்கப்பூர் டாலர் மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களில் இருந்தன.

விலையுயர்ந்த பொருட்கள் பல அறைகளில் உள்ள பைகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

உடல்நல பிரச்சினைகள்

பிப்ரவரி 23 அன்று, இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, அவருடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணை ஊழல் தடுப்பு ஆணையம் சட்டம் 2009 இன் பிரிவு 16A மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001-இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.