Home நாடு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கலந்துரையாடல்

415
0
SHARE
Ad
* டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்,  தமிழ் மின்மரபுடமைத் திட்டம், சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் ஆகிய இருபெரும் தமிழ் சமூகம் சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025-ஆம் நாள் மாலை 6.00 மணி முதல் தேநீர் விருந்துபசரிப்புடன் கோலாலம்பூர், மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தொழில் நுட்பர் முத்து நெடுமாறன் நிகழ்ச்சியின் நெறியாளராக கலந்துரையாடலை வழி நடத்துவார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு வருகை புரிவார்.

#TamilSchoolmychoice

தமிழ் மின்மரபுடமைத் திட்டம் என்பது சிங்கப்பூரின் தமிழ் நூல்கள், நாளிதழ்கள், பண்பாட்டு ஆவணங்களை மின்னிலக்க உருமாற்றம் செய்து சிங்கப்பூர்  நூலகத்தில் பாதுகாக்கும் பெருந்திட்டமாகும்.

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் என்பது சிங்கப்பூரில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர்கள் வழங்கி வந்துள்ள பங்களிப்புகளை ஒரு கலைக்களஞ்சியமாக மின்னிலக்க உருவில் ஆவணப்படுத்தும் திட்டமாகும்.

சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு அருண் மகிழ்நன் தமிழ் மின்மரபுடமைத் திட்டத்தின் பொறுப்பாளராகவும், சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு தலைவரான, திரு அழகிய பாண்டியன் சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் திட்டத்தின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

இருவரும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேற்குறிப்பிட்ட இரு திட்டங்கள் குறித்த தங்களின் அனுபவங்களையும், கருத்துக்களையும் விளக்கங்களோடு பகிர்ந்து கொள்வர். அதன் பின்னர் கலந்துரையாடல் நடைபெறும்.

அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் இருவர் குறித்த அறிமுகத்தை செல்லியல் இணைய ஊடக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்குவார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புகளையும் தமிழரின் வரலாற்றையும் தொழில்நுட்ப உலகில் நிலைபெறச் செய்யும் முன்னெடுப்புகள் குறித்த இந்த ஆழமான கலந்துரையாடலில் கலந்துகொள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் ஏற்பாட்டாளர்கள், இரா.முத்தரசன், முத்து நெடுமாறன் அன்புடன் அழைக்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழைபவர்கள் கீழ்க்காணும் இணைப்பில் முன்பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகின்றனர்.

முன்பதிவு: https://forms.gle/JzFUa6KUxTWBNAuv8

இந்த நிகழ்ச்சி செல்லியல் இணைய ஊடகத்தின் யூடியூப், முகநூல் தளங்களில், கீழ்க்காணும் இணைப்புகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

https://youtube.com/live/6_spIJV9WTk?feature=share

http://facebook.com/selliyal

நிகழ்ச்சி நடைபெறும் நாளில் ஆசியான் உச்ச நிலை மாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றங்களைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.