சென்னை, ஏப்ரல் 30- மரக்காணம் கலவரம் குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அனைவரும் மரக்காணத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்டது, குடிசைகள் எரிக்கப்பட்டது, அரசு பஸ்கள், தனியார் வண்டிகள் தாக்கப்பட்டது மற்றும் எரிக்கப்பட்டது ஆகிய வன்முறைகளைக் கண்டித்துள்ளனர்.
நிறைவாக உரையாற்றிய முதல்-அமைச்சர், மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காவல்துறையின் நிபந்தனைகளை மீறியதை சுட்டிக்காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்விழாவில் பங்கேற்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலும் குடிபோதையில் வந்துள்ளனர் என்றும், அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல்துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்தபோது சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தியுள்ளனர். எனவே வேண்டுமென்றே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவருகிறது என கூறியிருப்பதன் மூலம் யார் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாய்மையே வெல்லும்; ஜனநாயகமே நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் முதல்-அமைச்சர் உண்மையை உலகுக்கு உரத்துச் சொல்லி, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தை பேணவும் வழி வகுத்திருக்கிறார்.
முதல்-அமைச்சரின் இந்த விளக்கம் கடந்த சில மாதங்களாக வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்டு வரும் தலித் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இந்நிலையில், முதல்-அமைச்சருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு சாதியவாத சக்திகளின் வன்முறை போக்குகளைக் கண்டித்து உரையாற்றிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கு கட்சி, தேர்தல் போன்ற வரம்புகளையெல்லாம் தாண்டி, அனைத்து கட்சியினரோடும் விடுதலை சிறுத்தைகள் என்றும் கைகோர்த்து நிற்போம் என்று உறுதியளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.